தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்காக அரசாங்கம் 5 வருட விசேட திட்டம்
வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைத் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நலன்புரி மற்றும் நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, ஐந்து வருட விசேட அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர் குடும்ப மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை” எனும் பெயரில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்பங்களில் உள்ள 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து அவதானம் செலுத்தப்பட்ட போதிலும், அந்த குடும்பங்களின் நிலையான அபிவிருத்தி குறித்து இதுவரை போதிய கவனம் செலுத்தப்படவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.