தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து! இருவர் சம்பவ இடத்தில் பலி
கம்பஹா, கந்தானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோர தொடருந்து விபத்து நேற்று(09.06.2026)காலை வேளையில் அரங்கேறியுள்ளது.
தொடருந்து கடவையை அவசரமாக கடக்க முயன்று
கந்தானை புனித மரியா தொடருந்து கடவையில், தொடருந்து ஒன்று வந்துகொண்டிருப்பதைக் குறிக்கும் வகையில் கடவையின் சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விளக்குகள் எரிந்து, ஒலிச் சிக்னல்களும் செயற்படுத்தப்பட்டிருந்தன.
எனினும், அந்த எச்சரிக்கைகளையும் மீறி முச்சக்கரவண்டியின் சாரதி தொடருந்து கடவையை அவசரமாக ஊடறுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது, சிலாபத்திலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த தொடருந்துடன் முச்சக்கரவண்டி எதிர்பாராத விதமாக மிகக் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது.
தொடருந்து மோதிய வேகத்தில் முச்சக்கரவண்டி கடுமையாகச் சேதமடைந்ததுடன், தூக்கி வீசப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஏக்கலை, ஜோஷிட்டா வத்தையைச் சேர்ந்த எம். ரீட்டா என்ற பெண் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகிய இருவரும் உடல் நசுங்கி விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து காரணமாகப் புத்தளம் – கொழும்பு தொடருந்து பாதையின் போக்குவரத்துச் சேவைகள் சில நிமிடங்கள் தாமதமடைந்தன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுப் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோர விபத்து தொடர்பாகக் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.