;
Athirady Tamil News

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் மரணம்; உறவினர்கள் சந்தேகம்

0

பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கண்டி, யடிநுவர பகுதியில் பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, யடிநுவர பகுதியைச் சேர்ந்த கே.ஏ. நந்தனி கலன்சூரிய என்ற 59 வயதுடைய பெண்ணாவார்.

உயிரிழந்த பெண் ஆஸ்துமா நோய் நிலைமைக்காக 20 வருடங்களுக்கும் மேலாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன், இவருக்கு ‘அமோக்சிலின்’ (Amoxicillin) மருந்து ஒவ்வாமை (Allergy) உடையது என மருத்துவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே பரிந்துரைத்திருந்தனர்.

உறவினர்கள் குற்றம்…
கடந்த 5 ஆம் திகதி இவரது நோய் நிலைமை தீவிரமடைந்ததால் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கடந்த 10 ஆம் திகதி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது வீட்டில் பயன்படுத்துவதற்காக வைத்தியசாலையினால் மருந்துகள் வழங்கப்பட்டிருந்ததுடன், அவருக்கு ஒவ்வாமை உடையது என முன்னரே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்த ‘அமோக்சிலின்’ என்ற மருந்தே இதன்போதும் வழங்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அன்றைய தினம் இரவே அந்த மருந்தை உட்கொண்டதன் பின்னர் அவர் கடுமையான நிலைக்கு உள்ளாகியதுடன், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த மரணம் குறித்து பேராதனை போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பொலிஸாருக்கும், பேராதனை பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நந்தனி கலன்சூரியவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது மரணம் குறித்து திறந்த தீர்ப்பு (Open verdict) வழங்கப்பட்டு, உயிரிழந்த பெண்ணின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னரே இந்த மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.