;
Athirady Tamil News

திருவிழா சண்டையை தடுத்த முதியவருக்கு பழிவாங்கலா?வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்

0

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற முதியவர் ஒருவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸார் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நொச்சிமுனை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் ஆலய வளாகத்தில் மோதலில் ஈடுபட வேண்டாம் எனக் கூறி சண்டையை தடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அவர் கீழே விழுந்து தலையில் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற தினமான நேற்று மதியம், நொச்சிமுனை இசை நடனக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள குறித்த முதியவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சேதம் விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ நேரத்தில் வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு சமுர்த்தி அலுவலகத்திற்கு சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர்கள் மதில் ஏறி வீட்டிற்குள் நுழைந்து கதவை உடைத்ததுடன், யன்னல்கள், அலமாரி கண்ணாடிகள் மற்றும் வீட்டுப் பொருட்களையும் அடித்து நொறுக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய குடும்பத்தினர் சேதப்படுத்தப்பட்ட நிலையை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்கள் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அவர்கள் பலமுறை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து பல முறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதிலும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.