;
Athirady Tamil News

சூடானில் இருந்து தாயகம் வந்த கேரள பெண்ணுக்கு எபோலா அறிகுறி!

0

சூடானில் இருந்து தாயகம் வந்த கேரள பெண் ஒருவருக்கு எபோலா அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெற்கு சூடானில் இருந்து தாயகம் வந்தடைந்த கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எபோலா தொற்றின் பரவலைத் தடுக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு எபோலா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் எனும் சந்தேகத்தில் அவரை சுகாதார அதிகாரிகள் கோட்டயம் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்புப் பிரிவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால், அந்தப் பெண்ணுக்கு வெறும் காய்ச்சல் மட்டுமே இருப்பதாகவும், எபோலா தொற்றுக்கான பிற அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தப் பெண்ணிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக திருவனந்தபுரத்திலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆய்வின் முடிவுகளில் எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டால், அடுத்தக்கட்ட சிகிச்சைக்காகத் தனி மருத்துவக் குழு உருவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கடந்த மே 15 முதல் 676-க்கும் அதிகமானோர் எபோலா பாதிப்புகளால் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.