சத்தீஸ்கரில் லாரிகளுக்கு நடுவே சிக்க வைத்து காருக்கு தீ – பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் உயிரிழப்பு
ராய்ப்பூர்: லாரிகளுக்கு நடுவே சிக்கவைத்து காருக்கு தீவைத்ததால் அதிலிருந்த பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரத் சிங்(எ) லல்லா சிங். பாஜக நிர்வாகியான இவர் இங்குள்ள ஜன்பாத் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ஆவார். சோனாஹட் பகுதியில் நடத்தப்படும் மணல் குவாரி ஒப்பந்தம் பாரத் சிங்குக்குக் கிடைத்துள்ளது.
மணல் குவாரி ஒப்பந்தம் தனக்குக் கிடைக்காத காரணத்தால் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பாஜக தலைவர் மனோஜ் திரிபாதிக்கும், பாரத் சிங்குக்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் மணல் குவாரி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாரத் சிங் சென்றபோது இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
3 நாட்களுக்கு முன்பு சோன்ஹாட் போலீஸ் சரகத்துக்குட்பட்ட நவ்கெயின் கிராமம் வழியாக பாரத் சிங் தனது டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யுவி காரில் நண்பர்கள் 2 பேருடன் சென்றார். நவ்கெயின் கிராமம் அருகே பாரத் சிங்கின் கார் வந்தபோது, அவரது காரின் முன்னும், பின்னும் லாரிகளை நிறுத்தி அவரை தப்பிக்க விடாமல் மர்ம நபர்கள் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பாரத் சிங்கின் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். இதில் பாரத் சிங் மற்றும் அவரது நண்பர்கள் வீரேந்திரா சிங், நாகேந்திரா சிங் ஆகிய 3 பேரும் உடல் கருகி இறந்தனர். மயங்க் சிங் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நாசச் செயலில் ஈடுபட்டதாக அக்சத் திரிபாதி, விஷால் திரிபாதி, சத்யபிரகாஷ் திரிபாதி, மன்னு திரிபாதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.