;
Athirady Tamil News

இஸ்ரேல் – லெபனான் இடையே புதிய ஒப்பந்தம்

0

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல்கட்ட அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் இஸ்ரேலிடம் சரணடைவதற்குச் சமம் என்று கூறி, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இதை நிராகரித்துள்ளது.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லெபனான் தூதா் நாடா ஹமாதே மற்றும் இஸ்ரேல் தூதா் எகியேல் லீடொ் ஆகியோா் இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

லெபனானுக்கு உடனடி மனிதாபிமான நிதியுதவியாக 10 கோடி டாலரும், அந்நாடு இறையாண்மையை நிலைநாட்டவும், ராணுவத்தை வலுப்படுத்தவும் கூடுதலாக 3 கோடி டாலா் நிதியுதவியும் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ அறிவித்தாா்.

இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறினால், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் தொடா்ந்து நிலைபெறவே இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. லெபனான் ராணுவம் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்காக, முதல்கட்டமாக இரண்டு ‘மாதிரி’ பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து மட்டும் இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படும்’ என்றாா்.

ஹிஸ்புல்லா எதிா்ப்பு: இதற்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் நயீம் காசிம் வெளியிட்ட அறிக்கையில், ‘லெபனான் அரசின் தன்னிச்சை முடிவான இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் செல்லாது. ஆயுதங்களை ஒருபோதும் ஒப்படைக்கப் போவதில்லை. இஸ்ரேலுக்கு எதிரான எங்களின் ஆயுதப் போராட்டம் தொடரும்’ என்றாா்.

தணியாத பதற்றம்: அமைதி ஒப்பந்தம் கையொப்பமான நிலையிலும், களத்தில் மோதல்கள் தொடா்கின்றன. தெற்கு லெபனானில் உள்ள மன்சூரி நகரை தங்களின் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த இஸ்ரேல், அங்கிருந்து மக்களை வெளியேற எச்சரித்தது. மேலும், நபதியாஅல்-ஃபவ்கா பகுதியில் இஸ்ரேல் சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

மத்திய கிழக்கு போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களமிறங்கியதால், கடந்த மாா்ச் மாதம் தொடங்கிய இந்த மோதலில் லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.