;
Athirady Tamil News

நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபருக்கு பிணை

0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை(27)  கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உதைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் பல தரப்பினரின் கோரிக்கைக்கமைய   மாலை  கல்முனை தலைமையக பொலிஸார் சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.

இதன் போது இன்று (28) மாலை கல்முனை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் வழக்கினை மறுதவணைக்காக  ஜூலை மாதம் 13 ஆந் திகதி வரை ஒத்தி வைத்தார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய  21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நாய் யாழில் இருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினரோடு பயணித்து வரும் சுப்பிரமணியன் எனும் பெயருடைய  நாய் என்பதாகும்.

மேலும்   இன்று கல்முனை பிரதேசத்தில் வைத்து  சந்தேக நபரினால்  தாக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயலாகும் என   இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சுமார்  450 கிலோ மீற்றர்  தூரம் பயணித்து வந்த குறித்த சுப்பிரமணியன் எனும் நாய் தாக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் வைரலானதுடன் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கண்டங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாயை தாக்கிய சந்தேக நபர்  கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறித்த நாய் தன்னால் துன்புறுத்தலுக்கு உள்ளானமை குறித்து மன்னிப்பு கோரி உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆலோசனைக்கமைய  கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண  நெறிப்படுத்தலில்  இடம்பெறுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.