பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி! கல்வி அமைச்சின் அறிவிப்பு
நுளம்புகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மாணவர்கள் பாடசாலை சீருடையுடன், கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்வின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்கள் உடலை மறைக்கும் ஆடைகளை அணிய அனுமதிப்பது, பாடசாலை மாணவர்களிடையே டெங்கு நோய் பரவுவதைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புத் திட்டங்கள்
அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலும் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்கேற்புடன், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழித்தல் மற்றும் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் சிறப்புத் திட்டங்களைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிக அபாயம் உள்ள 60 டெங்கு மண்டலங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு நுளம்பு ஒழிப்புத் திட்டம் நாளை தொடங்கும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.