;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும்

0
கல்விக்காக வழங்கப்படும் உதவியே மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப் பெரிய உதவியாகும் என்றும், ‘எங்களால் எதுவும் முடியாது என்றில்லை, முயன்றால் எதுவும் முடியும்’ என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவசக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் ஒவ்வொரு மாணவரின் அர்ப்பணிப்புடனும் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். ‘இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும், ஒவ்வொரு மாணவரின் வெற்றியும் அவரது தனிப்பட்ட வெற்றியை மட்டுமன்றி வடக்கு மாகாணத்தின் பெருமையையும் உயர்த்தும்

பதினாறு வயது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை என்பதால், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, தவறான பழக்கவழக்கங்களிலிருந்தும், நேரத்தை வீணடிக்கும் செயல்களிலிருந்தும் விலகி, கல்வியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு மற்றும் காலவிரயம் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் நேரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்

அரசாங்கமும் வடக்கு மாகாண நிர்வாகமும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.

பாடசாலைகள், ஆசிரியர்கள், நூல்கள் மற்றும் கல்வி வசதிகள் அனைத்தும் மாணவர்களின் வெற்றிக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, மாணவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவர்களே

பெற்றோரின் தியாகங்களையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் மதித்து, கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் அவர்களின் உழைப்புக்கு மாணவர்கள் சிறந்த கைமாறு செய்ய வேண்டும்.

அதிக மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமன்றி, நேர்மை, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் மனிதநேயப் பண்புகளுடன் சிறந்த குடிமக்களாக உருவாகுவதும் கல்வியின் உண்மையான நோக்கமாகும்

இன்றைய மாணவர்களே நாளைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், நிர்வாகிகள் மற்றும் நாட்டை வழிநடத்தும் தலைவர்கள்

பெரிய கனவுகளைக் காணவும், அந்தக் கனவுகளை நனவாக்கும் வகையில் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டும் . முயற்சி செய்பவர்களை யாராலும் தடுக்க முடியாது, இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதப்போவது இன்றைய மாணவர்களே என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், சட்டத்தரணி வே. தேவசேனாதிபதி, அனுசரணையாளர் நாகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.