;
Athirady Tamil News

அமெரிக்காவிற்கு கனடா வழங்கிய பதிலடி ; விரைவில் அமுலாகும் வரிகள்

0

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா நேற்று (25) அறிவித்துள்ளது.

இது அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரிகளுக்கு நிகரான டொலர் மதிப்பைக் கொண்டுள்ளதுடன், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் பாதிக்கப்பட்டுள்ள கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் கனடா வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகள்
அமெரிக்கப் பொருட்களுக்கான இந்த பதில் வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரும் என்றும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% வரிகள் விதிக்கப்படும் என்றும் அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான நிதி ஆதரவைப் பொறுத்தவரை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான ஆதரவு, நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு நிதியளிக்கும் வழிமுறை மற்றும் புதிய வரிகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கான ஆதரவு உள்ளிட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது.

வரிகளைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய 50% வரிகள் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்தன.

இந்த பரஸ்பர பழிவாங்கும் வரிகள் கனடா-அமெரிக்க உறவில் ஒரு புதிய பின்னடைவைக் எடுத்துக்காட்டுகின்றன.

எங்களது டொலருக்கு டொலர், வீதத்திற்கு வீதம் என்ற அடிப்படையிலான பதில் வரிகளும், பல பில்லியன் டொலர் உதவித் திட்டமும் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் என்று கனடாவின் நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.