;
Athirady Tamil News

ரன்வேயில் திடீரென வெடித்த விமான டயர்கள்: அதிர்ஷ்டவசமாக 172 பயணிகள் உயிர் தப்பினர்

0

அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் ஓஹேர் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வடக்கு கரோலினாவின் சார்லோட் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்கு சொந்தமான போயிங் 737 ரக ஜம்போ விமானம் இயக்கப்பட்டது.விமானத்தில் 172 பயணிகள், 20-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் இடம் பெற் றனர். மதியம் 2 மணியளவில் விமானம் புறப்படுவதற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஓடுபாதை யில் அந்த விமானம் நகர்ந்து சென்று கொண்டிருந்தது.

டயர்கள் வெடித்தன

அப்போது விமானத்தின் வலதுபுறம் இருந்த 2 டயர்களும் திடீரென வெடித்து சிதறின. இதனால் விமானத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து புகையும் கிளம்பியது. மேலும் விமானம் குலுங்கியதால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். இருப்பினும் இது எப்போதும் போல் புறப்படும் முன்னர் ஏற்படும் நிகழ்வு என கருதி விமானிகள் உள்பட பயணிகள் அஜாக்கிரதையாக விட்டனர். இதனை பின்னால் இருந்த மற்றொரு விமானத்தின் விமானி கவனித்து, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனால் விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு வானில் பறப்பதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டது.

தொடர் விபத்து

தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் வர வழைக்கப்பட்டு விமானத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டு, பஸ்கள் மூலம் முனையத்திற்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பயணிகள் மாற்று விமானம் மூலம் சார்லோட் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் 8 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் சிகாகோ விமான நிலையங்களில் நடக்கும் 5-வது டயர் வெடிப்பு சம்பவம் இதுவாகும். இது குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும், இந்த சம்பவங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும், வெவ்வேறு ஓடுபாதைகள் மற்றும் விமான மாடல்களில் இவை நிகழ்ந்துள்ளதாகவும் சிகாகோ விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.