உணவு தேடி வந்த கரடியால் தீப்பற்றிய வீடு… அமெரிக்காவில் வினோதம்
வாஷிங்டன்,
அமெரிக்காவில் வீட்டிற்குள் புகுந்த கரடி ஒன்று, பிரிட்ஜில் உணவு தேடியபோது எதிர்பாராதவிதமாக அடுப்பின் பட்டன் திருப்பப்பட்டு அடுப்பில் தீப்பற்றி சமையலறையில் தீ பரவியது.
வீட்டுக்குள் புகுந்த கரடி
அமெரிக்கா நாட்டின் கொலராடோ மாகாணத்தில் மவுண்ட் கிரெஸ்டட் பட் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, காடுகளில் கரடிகளுக்குக் கிடைக்கும் இயற்கை உணவுகள் பெருமளவில் குறைந்துள்ளன. இதனால், உணவைத் தேடி கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது இந்த கோடை காலத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு 1:16 மணியளவில், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பெரிய கரடி ஒன்று நுழைந்தது.
தீ விபத்து
சமையலறைக்குள் புகுந்த அந்த கரடி, அங்கிருந்த பிரிட்ஜை வலுக்கட்டாயமாகத் திறந்து உணவைச் சாப்பிட முயன்றது. அப்போது, பிரிட்ஜில் இருந்த உணவுப் பொருட்களை வெளியே இழுக்கும் அவசரத்தில், அங்கிருந்த சமையல் அடுப்பின் பட்டனை அது தற்செயலாகத் திருப்பியுள்ளது. இதனால் அடுப்பு பற்றிக்கொண்டு, அருகில் இருந்த பொருட்கள் மீது தீ பரவத் தொடங்கியது.
உயிர் தப்பிய குடும்பத்தினர்
வீட்டில் தீப்பற்றியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பாக வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கரடி கருணைக்கொலை
எனினும், மனித குடியிருப்புகளுக்குப் பழகிப்போன அந்த கரடி, சமையலறையைச் சேதப்படுத்தியதோடு பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது. இதன் காரணமாக, வனவிலங்கு விதிமுறைகளின்படி அதிகாரிகள் அந்த கரடியை அப்போதே துப்பாக்கியால் சுட்டு கருணைக்கொலை செய்தனர். மேலும், பொதுமக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளைப் பத்திரமாகப் பூட்டி வைக்குமாறும் வனத்துறை எச்சரித்துள்ளது.