;
Athirady Tamil News

நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!

0

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.

இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இந்த தம்பதியின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ‘போர்ட் மூடி’ பகுதியைச் சேர்ந்த தவால் ஷா மற்றும் அவரது மனைவி மேகா ஷா ஆகியோர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்று தவாலின் சகோதரர் கேவல் ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எப்படியாவது வெள்ளத்திலிருந்து தப்பித்து, உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல செய்தி வரக் கூடாதா என்று தான் நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என காணாமல் போன கனடியரின் சகோதரர் கேவல் ஷா தெரிவித்துள்ளார்.

திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

இதில் தவால்-மேகா தம்பதி உட்பட குறைந்தபட்சம் 30 கனடியர்களும், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர் என கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் அடர்த்தியாகக் குவிந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.