;
Athirady Tamil News

பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் மது, போதைப்பொருட்களுக்கு தடை

0

பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் ‘கிரிக்கெட் சமர்’ (Big Matches) தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.