;
Athirady Tamil News

7 குழந்தைகளின் தாயான எழுத்தாளர்: ஜப்பான் பெண்களுக்கு சொன்னது என்ன?

0

டோக்கியோ,

ஜப்பானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோய் ஹாஷிமோட்டோ தனக்கு 7-வது குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அத்துடன், ஜப்பானின் மக்கள் தொகை சரிவைத் தடுக்க மற்ற பெண்களும் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் விடுத்துள்ள கோரிக்கை நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

7-வது குழந்தை

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் முன்னாள் அரசியல் வேட்பாளர் கோட்டோய் ஹாஷிமோட்டோ (வயது 37). அவருக்கு கடந்த மாதம் 28-ந்தேதி குழந்தை பிறந்தது. இதையடுத்து ஹாஷிமோட்டோ தனது எக்ஸ் வலைதளத்தில் கடந்த 29-ந்தேதி அன்று, பிறந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் “எனக்கு 7-வது குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டிருந்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் 27 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகப் பரவி வருகிறது.

பெண்களுக்கு விடுத்த வேண்டுகோள்

ஜப்பான் நாடு தற்போது எதிர்கொண்டு வரும் மிகக் கடுமையான பிறப்பு விகித குறைவு குறித்து பேசிய அவர், “ஜப்பானிய பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க இதுவே சரியான தருணம். நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் பெண்களின் கைகளில்தான் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பதிவிற்கு பதில் அளித்த நெட்டிசன்கள்

“நீங்கள் சொல்வது முற்றிலும் சரி என்று நான் நினைக்கிறேன். மக்கள்தொகைச் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஜப்பானின் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான திறவுகோல், ஜப்பானிய பெண்களின் மனசாட்சிதான் என்று நான் உணர்கிறேன்,” என்று முகநூல் பயனர் எட்சுகாகு கான்கோ அவரது பதிவிற்குப் பதிலளித்தார். மற்றொரு பயனரான ஹிடெட்டோ உமேகாகி, “ஏழு குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு தேசியப் பொக்கிஷம்” என்று கூறினார்.

சமூக விவாதம்

தற்போது ஜப்பானில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்து, நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. பெரும்பாலான தம்பதியினர் ஒரு குழந்தை அல்லது குழந்தைகளே வேண்டாம் என்ற நிலையை நோக்கி செல்லும் இந்த சூழலில், ஹாஷிமோட்டோ 7 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது இந்த முடிவைப் பாராட்டிப் பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், தற்போதைய பொருளாதார சூழலில் அதிக குழந்தைகளை வளர்ப்பது சாதாரண குடும்பங்களுக்கு சாத்தியமற்றது என்ற மாற்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.