யாழில் நடுவீதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்; வசமாக பிடிபட்ட சந்தேகநபர்கள்
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் விவகாரத்தில், நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
வாள்வெட்டுத் தாக்குதல்
இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே, குறித்த இளைஞர் மீது இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், வவுனியா – நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்ட மூவர் மற்றும் அச்செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என மொத்தம் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.