;
Athirady Tamil News

யேமனில் தீவிரம் குறையாத மோதல்

0

யேமனில் சவூதி கூட்டுப் படையினா்-ஹூதி கிளா்ச்சியாளா்கள் இடையிலான மோதலில் தீவிரம் குறையாமல், நாள்தோறும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

சவூதி ஆதரவு யேமன் அரசுப் படையினருக்கு எதிரான சண்டையில் மோகா துறைமுக நகரை வியாழக்கிழமை கைப்பற்றிய ஹூதிக்கள், அடுத்தகட்டமாக யேமனின் மேற்கு கடற்கரையிலிருந்து 3.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள எரிமலைத் தீவான மயூன் (பெரிம்) தீவையும் தங்கள் வசப்படுத்தினா். இதை யேமன் அரசு மற்றும் ஹூதி அமைப்பின் உயரதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.

இதையடுத்து, மோகாவின் விமான நிலையத்தின் மீது சவூதி தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. மோகா விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

சா்வதேச அளவில் சுமாா் 12 சதவீத வா்த்தக சரக்குகள் கொண்டு செல்லப்படும் பாப் அல் மண்டேப் நீரிணையில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மயூன் தீவு கைப்பற்றப்பட்டிருப்பது குறித்து சா்வதேச நாடுகள் அச்சப்படத் தேவையில்லை எனவும்; சவூதியின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹூதி அமைப்பின் அரசியல் பிரிவு நிா்வாகி ஹஸாம் அல்-அசாத் தெரிவித்துள்ளாா்.

ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோா்முஸ் நீரிணைக்கு மாற்றாக, பாப் அல் மண்டேப் நீரிணைதான் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

யேமனில் ஹூதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தை சவூதி கூட்டுப் படை கடந்த ஜூலையில் தாக்கியதைத் தொடா்ந்து வெடித்துள்ள இப்புதிய மோதல் காரணமாக, கடந்த 2022 முதல் நீடித்து வந்த தற்காலிக அமைதி உடன்பாடு முறிந்து, யேமனில் மீண்டும் முழுமையான உள்நாட்டுப் போா் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, யேமன் மீதான கடல்வழி முற்றுகையை சவூதி கைவிட்டு, மீண்டும் பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.