கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் ; மக்களை வெளியேற அறிவுறுத்தல்
கண்டி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பஸ்பாகே கோரள பிரதேச செயலகப் பிரிவுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அதி தீவிர எச்சரிக்கை மட்டம் 3-இன் கீழ் சிவப்பு எச்சரிக்கையுடன் வெளியேறும் அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அப்பகுதியில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்
தொடரும் கனமழையால் சரிவுகள் இடிந்து விழுதல், பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பஸ்பாகே கோரள பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நிலத்தில் ஆழமான வெடிப்புகள், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல், கட்டிடங்களின் தரை மற்றும் சுவர்களில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்ற மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, யட்டிநுவர, உடுநுவர, பாததும்பறை மற்றும் தொலுவ பகுதிகளுக்கு மஞ்சள் மட்டம் 1 எச்சரிக்கையும், உடுபாலத்தை மற்றும் கங்கா இஹல கோரள பகுதிகளுக்கு செம்மஞ்சள் மட்டம் 2 எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.