;
Athirady Tamil News

பயணிகளை நடுவழியில் இறக்கிய சிற்றூர்தி சாரதி நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை!

0
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்திற்கு என பயணிகளை ஏற்றி சென்ற சிற்றூர்தி பயணிகளை இடைவழியில் இறக்கி சென்ற சம்பவம் தொடர்பில் சிற்றூர்தி சாரதி மற்றும் நடத்துநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் 
பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 16ஆம் திகதி செல்வ சந்நிதி ஆலயத்திற்கு என பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிற்றூர்தி , ஆலயத்திற்கு செல்லாது இடை வழியில் தொண்டமானாறு சந்தியில் பயணிகளை இறக்கி விட்டு சென்றுள்ளது.
அது தொடர்பில் பயணி ஒருவர் காணொளி ஆதாரத்துடன் , தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்
குறித்த காணொளி பதிவு வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு , வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கு பணித்தார்
அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் , குறித்த சிற்றூர்தி சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர்களை இருவரும் தமது தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோரினார்கள்.
அதனை அடுத்து இருவரையும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பணியில் இருந்து இடைநிறுத்துமாறு , வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் வடமராட்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருக்கு அறிவித்துள்ளார்
அதேவேளை , பேருந்துச் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகள், சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் ஒழுங்கீனமான செயற்பாடுகள், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் பொதுமக்கள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முறைப்பாட்டு வட்ஸ்அப் இலக்கமான 071 9090900 ஊடாகத் தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம் என வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.