;
Athirady Tamil News

பண்டிகைக் கால உணவுப் பொருட்களில் இத்தனை ஆபத்தா? சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

0

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையின் பல நகரங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன்போது, பருத்தித்துறை நகரில் மூன்று உணவகங்கள் உள்ளிட்ட 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரில் நேற்று முன்தினம் (04) புதன்கிழமை மாலை 5 மணிமுதல் இந்தத் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மூன்று உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இயங்கியமை கண்டறியப்பட்டது.

அத்துடன், காலாவதித் திகதி கடந்த பாசுமதி அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதி குறிப்பிடப்படாத நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோகிராமுக்கும் அதிகமான குத்தரிசிப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மூன்று உணவகங்கள் மற்றும் ஏழு வர்த்தக நிலையங்கள் என மொத்தம் 10 நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா – நோர்வூட் நகரிலுள்ள உணவகங்கள், மரக்கறிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிலையங்களிலும் மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பழுதடைந்த மரக்கறிகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ‘கோலி சோடா’ குளிர்பானத்தின் விற்பனை மற்றும் இருப்பு தொடர்பிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்களைச் சுகாதாரமற்ற முறையில் கையாளுதல் மற்றும் முறையற்ற வகையில் சேமித்து வைத்தல் உள்ளிட்ட சுகாதார விதிமீறல்கள் தொடர்பிலும் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.

விதிமுறைகளை மீறிய வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.