;
Athirady Tamil News

புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

0

வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ‘அக்வான்’ (Akvan) புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் இன்று (நவம்பர் 15) கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அக்வான் புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நகரும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (16) மாலை மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நவம்பர் 18ஆம் திகதியளவில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், புயலின் நகர்வுப் பாதை மற்றும் கரையைக் கடக்கும் இடம் தொடர்பில் இதுவரை உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.

தனியார் வானிலை ஆய்வாளர்களின் சில கணிப்புகளின்படி, இந்தப் புயல் தமிழகக் கடற்கரையை நோக்கித் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

இருப்பினும், சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதியில் கரையைக் கடக்கும் என உறுதிப்படுத்தப்படவில்லை.

புயல் சின்னத்தின் தாக்கத்தால் வடதமிழகத்தின் சில பகுதிகளில் நவம்பர் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புயலின் நகர்வைப் பொறுத்து மழையின் அளவும் பாதிக்கப்படும் பகுதிகளும் மாறக்கூடும்.

இதற்கிடையில், இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அவசரகால மீட்புப் பணிகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடலோரக் காவல்படையின் ரேடார் நிலையங்கள் வானிலை மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கெனவே கடலில் உள்ளவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 15 முதல் 18ஆம் திகதி வரையும், மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16 முதல் 19ஆம் திகதி வரையும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.