தமது பூர்வீக மண்ணில் மீண்டும் கால்பதித்து, சொந்த வீடுகளில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற ஏக்கத்துடன் பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இவ்வாரத்துடன் 22 ஆவது வாரத்தை எட்டியுள்ளது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, தமது வாழ்வுரிமைக்காகவும் பூர்வீகக் காணிகளை மீளப்பெறுவதற்காகவும் பலாலி மக்கள் இன்றும் வீதியில் இறங்கிப் போராடினர்.
பல தசாப்தங்களாகத் தமது சொந்த மண்ணிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள மக்கள், எப்போது தமது வீடுகளுக்கும் காணிகளுக்கும் திரும்புவோம் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு வாரமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எத்தனை காலம்தான் எமது சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ்வது? எமது பூர்வீக மண்ணில் வாழ்வதற்கான உரிமை எமக்கு இல்லையா? நாங்களும் ஏனைய மக்களைப் போன்று மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும்.
அதற்கு எமது நிலத்தை எங்களிடம் மீள ஒப்படையுங்கள் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கண்ணீருடன் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மழையிலும் வெயிலிலும் இடைவிடாது தொடரும் இந்தப் போராட்டம் வெறுமனே காணிகளை மீட்டெடுப்பதற்கான கோரிக்கையாக மாத்திரமல்ல.
தமது இழந்த வாழ்வாதாரம், குடும்ப உறவுகள், வாழ்வியல் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை மீளப்பெறுவதற்கான மக்களின் நீண்டகாலப் போராட்டமாகவும் இது அமைந்துள்ளது.
22 வாரங்களைக் கடந்தும் மக்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், பலாலி மக்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமும் இன்னமும் தொடர்கின்றன.
இதேநேரம் 2026 ஆம் ஆண்டும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
ஆனால் பலாலி மக்களின் நிலப்பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?
அனுர அரசே, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்களின் அவலத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்?, எப்போது எமது பூர்வீக மண்ணில் மீண்டும் கால்பதித்து நிம்மதியாக வாழும் நாள் பிறக்கும்?
எத்தனை வாரங்கள் கடந்தாலும் எமது நிலத்துக்கான உரிமைக்குரல் ஓயாது என்பதை வெளிப்படுத்தும் வகையில், பலாலி மக்களின் 22 ஆவது வாரப் போராட்டமும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.