;
Athirady Tamil News

’’வாயை மூடு’’ எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது !!

0

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறித்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து, அரச தரப்பு உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்ட நிலையில், சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்ததுடன், ஆகவே அதற்கு இடமளியுங்கள் என அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

மருதங்கேணி சம்பவம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது தொடர்பான கஜேந்திரன் எம்.பி.யின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

“அந்த சம்பவம் தொடர்பில் நான் முதல் நாளே அறிக்கை கோரினேன். அது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோக்களையும் பார்த்தேன். அதில் கஜேந்திரகுமார் எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ள வில்லை. பொலிஸ் அதிகாரிகளை ”வாயை மூடு”என தரக்குறைவாக பேசியதை அவதானித்தேன்” என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. “சிவில் உடையில் வந்தவர்கள் பொலிஸ் என குறிப்பிட்டார்கள். நான் அதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை. பொலிஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு சிவிலுடையில் படுகொலையில் ஈடுபட்ட சம்பவங்கள் நாட்டில் பல உள்ளன” என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், “அந்த காணியின் வேலிக்கு பின்னால் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நீங்கள் முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?” எனக்கேட்டார். “இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் எம்.பி சீருடையில் ஆயுதமேந்திய நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியுடன் நான் அப்படிப் பேசவில்லை” என்றார்.

தொடர்ந்து கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “பொலிஸாரை ”வாயை மூடு” எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எவர் கூறினாலும் நான் சகித்துக்கொண்டிருக்க மாட்டேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. விடயத்தில் பொலிஸாரின் பக்கம் எந்தத் தவறும் கிடையாது” என்றார்.

எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை 3.30 மணிக்கு பரீட்சை முடிவடைந்து விட்டது. சிவில் உடையில் வந்தவர்கள் தமது அடையாளத்தை

உறுதிப்படுத்தாமல் தங்களை பொலிஸ் என குறிப்பிட்டுக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா ? பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் வாரத்தில் கஜேந்திரகுமார் கொழும்புக்கு வருகை தந்துள்ளார் ஆகவே அவரை அவசரமாக ஏன் கைது செய்ய வேண்டும்“ என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பரீட்சை தொடர்பில் வீடியோவை பார்த்து அறிவிக்கலாம்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி முதல் பாராளுமன்ற உறுப்பினரை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்பு கொண்டார்கள். இறுதியில் சபாநாயகருக்கு அறிவித்ததன் பின்னரே கைது செய்யப்பட்டார் இவ்விடத்தில் அவசரப்படவில்லை” என்றார்.

இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி இந்த சம்பவத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்னை குற்றவாளியாக்கி பொலிஸாரை பாதுகாப்பது தெளிவாக விளங்குகிறது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.