;
Athirady Tamil News

நிஜவுலக கடவுள் !! (கட்டுரை)

0

மனிதனின் உயிர்நாடி இதயம். நம் உடலில் அனைத்து உறுப்புகளை விடவும் இது அதி முக்கியத்துவம் வாய்ந்தது; அற்புதமானது. இதயம் விரிந்து சுருங்கி எப்போதும் இடைவிடாது, தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 80 தடவை சுருங்கி விரியும் பணி நடைபெறுகிறது. நாள்தோறும் சராசரியாக ஒரு இலட்சம் முறை இதயம் துடிக்கிறது.

அவ்வாறான இதயம் துடிக்க மறுக்கும் சந்தர்ப்பங்களை தனக்கு சவாலாக எடுத்துக்கொண்டு இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் வைத்தியரின் அர்ப்பணிப்பான சேவை பற்றி இக்கட்டுரை அமைகின்றது.

தனியார் வைத்தியசாலையில் பிரசவிக்கப்பட்ட இரட்டை சிசுக்களில் ஒரு சிசு எதிர்நோக்கிய இருதய நோய் பற்றியும் அதனால் அந்த சிசுவின் பெற்றோர் எதிர்நோக்கிய பிரச்சினை, அதற்காக அவர்கள் பணத்தை வாரி இறைத்தும் பயனற்று வேறொரு வைத்திய நிபுணரை நாடி, குற்றுயிராய் கிடந்த தமது சிசு இன்று கரங்களில் வைத்து கொஞ்சுவதைப் பற்றியும் பணத்தை வாரி இறைத்தும் பயன் பெற முடியவில்லை எனும் தலைப்பின் கீழ் ஜூன் 19 ஆம் திகதியன்று வெளியான கட்டுரையில் பேசியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக குறித்த தனியார் வைத்தியசாலையில், சிசுவைக் காப்பாற்றுவதற்காக ஒரு வைத்தியரின் பெயரைப் பரிந்துரைத்தார்கள் என கூறினோம். அவரே இன்று அந்த பெற்றோருக்கு மாத்திரமல்ல அவர்களைப் போன்று பல பெற்றோருக்கு நிஜத்தில் தெய்வமாக விளங்குகின்றார் என்று கூறினால் தவறாகாது.

ஆம், அவர்கள் பரிந்துரைத்த பெயர் தான் வைத்திய கலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் ஆவார். இவர் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணராக கொழும்பு சீமாட்டி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் (Lady Ridgeway Hospital for Children) கடமையாற்றி வருகிறார்.

இனி கடந்த வாரம் கூறப்பட்ட அந்த சிசுவுக்கு எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டன, அவை எவ்வாறு வெற்றிகரமாக இந்த வைத்தியர் உள்ளிட்ட சீமாட்டி வைத்தியசாலையின் வைத்திய குழாமால் முன்னெடுக்கப்பட்டன என்பதைப் பார்ப்போம்.

தனியார் வைத்தியசாலையின் நிபுணர்கள் டாக்டர் முகுந்தனை பரிந்துரைத்ததை தொடர்ந்து, சிசுவின் தந்தை அவரை நேரடியாக இரவு 9 மணியளவில் தொடர்பு கொண்டு சிசுவின் ஆபத்தான நிலையை விளக்கி, இச்சிசுவை உங்களால் காப்பாற்ற முடியுமா? என வேண்டியுள்ளார்.

அதற்கு டாக்டர் முகுந்தன் அவர்கள் இந்தக் குழந்தைக்கு உடனடியாக இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளார். மேலும் இச்சத்திர சிகிச்சையில் ஏற்படும் ஆபத்துகளையும் அவர் விபரித்துள்ளார். தான் இதய வைத்திய நிபுணருடன் கலந்தாலோசித்து, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.

டாக்டர் முகுந்தன் அவர்கள் இதய வைத்திய நிபுணருடன் கலந்தாலோசித்து விட்டு, இச்சிசுவுக்கு Obstructed Infra Cardiac Total Anomalous Pulmonary Venous Connection என்ற பிறப்பில் ஏற்படும் இருதய குறைபாடு; அதாவது, நுரையீரலிருந்து (Lungs) வரும் ஒக்ஸிஜென்ட் கூடிய குருதி (Oxygenated Blood) இதயத்தின் இடது சோனை அறைக்குள் (Left Atrium) செல்லாது கீழ் பெருநாளத்தினுள் (Inferior Vena cava) திறப்பதனால் இக்குழந்தைக்கு குருதியில் ஒக்சிஜனின் அளவு (Oxygen Saturation) குறைவாக காணப்படும். இதனால் இருதயம், நுரையீரல் மற்றும் ஏனைய உடல் உறுப்புக்கள் செயலிழப்பதனால், தொடர்ந்து உயிர் வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே, இக்குழந்தைக்கு உடனடியாக இருதய சத்திர சிகிச்சை மூலம் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், இக்குழந்தை மிகவும் நிறை குறைந்ததாகவும் (Low weight), குறை வளர்ச்சியானதாகவும் (Prematurity), நோய் நிர்ணய தாமதத்தால் மற்றைய உடல் உறுப்புக்களின் செயற்பாடுகளில் பாதிப்பு இருப்பதாலும் (Delayed diagnosis and Multi organ dysfunction), இந்தக்குழந்தைக்கு சத்திரச் சிகிச்சையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகம் என்றும் கூறியிருந்தார். மேலும் இச்சிசுவை கொழும்பு சீமாட்டி றிச்வே சிறுவர் (LRH) வைத்தியசாலைக்கு மாற்றினால் தாம் குழந்தையின் நலனை பொறுப்பெடுப்பதாக கூறி அதற்குரிய ஒழுங்குகளை ஏற்படுத்தி கொடுத்திருந்தார்.

மறுநாள் காலை 5 மணிக்கு இச்சிசு சீமாட்டி றிச்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு உடனடியாக அன்று காலை 9 மணியளவில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆறு மணித்தியால சத்திர சிகிச்சையின் பின் சிசு அதி தீவிர சிகிச்சை பிரிவில் (Intensive Care Unit) கண்காணிக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பு பிரிவில் குழந்தையின் நிலைமை படிப்படியாக முன்னேறி பெற்றோரிடம் 3 வாரங்களின் பின் கையளிக்கப்பட்டது.

டாக்டர் முகுந்தன் அவர்களும் அவருடைய குழாத்தினரும் மிகவும் கண்ணும் கருத்துமாக இக்குழந்தையை பராமரித்து மிகுந்த சவால்களுக்கு மத்தியில் இக்குழந்தைக்கு புத்துயிர் கொடுத்துத்துள்ளனர்.

மேலும் வைத்திய நிபுணர் முகுந்தனும் அவரது குழாத்தினரும் கடந்த வருடம் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் இருதய பிரச்சினையுடன் பிரசவித்த சிசுவுக்கு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் துணிந்து, தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை பொருட்படுத்தாது சத்திரசிகிச்சையை மேற்கொண்டு பலராலும் பாராட்டு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறான பல இருதய சத்திரசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து, பலரது இதயம் நின்றுவிடாது துடிப்பதற்கு காரணமான வைத்திய நிபுணர் முகுந்தன் போன்றவர்களே நிஜவுலகில் தெய்வங்களாக மதிக்கப்பட வேண்டியவர்களாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.