கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடமானது மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள, மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடமானது மக்கள் சேவைக்காக இன்று(11.07.2025) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் Dr.தி.சர்வானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடத்தை மக்கள் சேவைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு, சேவைகள் அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடமானது 55.52 மில்லியன் ரூபாய் செலவீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் குறித்த வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இயங்கிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு, சேவைகள் அமைச்சின் உதவிச் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், வைத்தியர்கள், வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.