;
Athirady Tamil News

அவர்கள் என்னைத் தேடி வந்தபோது… !! (கட்டுரை)

0

நாடு வழமைக்குத் திரும்பிவிட்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களை வரிசையில் நிற்காமல் பெறமுடிகின்றமை, உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளமை, போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து அகன்றுள்ளமை போன்றன நிலைமை, சீராகியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இங்கு நாம் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி இன்னமும் கேட்கப்படாமலேயே இருக்கிறது. நாட்டை இந்த நெருக்கடிக்குத் தள்ளிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா? இல்லையெனில், எதன் அடிப்படையில் நாடு வழமைக்குத் திரும்பி விட்டது என்று நாம் நம்புகிறோம்? இப்போது நாட்டில் நடைபெறுகின்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளோமா?

இலங்கையில், இன்று வன்முறை சட்டரீதியான முறையில் அரங்கேறுகிறது. போராட்டக்காரர்களும் செயற்பாட்டாளர்களும் தண்டிக்கப்படுகிறார்கள். இதைச் சூழ்ந்து நடைபெறுகின்ற விவாதங்கள், கவனத்தை வேண்டுவன.

ஒருபுறம், “சட்டம் தன் கடமையைச் செய்கிறது” என்று சொல்லி ஒதுங்கிக் கொள்வோர் பலர். அவர்களுக்கு சட்டம் போராட்டக்காரர்களின் விடயத்தில் செய்வது மட்டுமே, கண்களுக்குத் தெரிகிறது. மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் தேடப்படும் நபர், வெளிநாட்டில் இருந்து தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுப்பது தெரிவதில்லை. சட்டம் தனது கடமையைச் செய்ய இயலாமல், குற்றவாளிகளை விடுதலை செய்வதோ, நாட்டைக் கொள்ளையடித்தோர் தண்டிக்கப்படாமல் இருப்பதோ கண்களுக்குத் தெரிவதில்லை.

சட்டம் யாருக்கானது என்பது பற்றிய தெளிவு வேண்டும். சட்டம் மக்களுக்கானது; அது அரசாங்கத்துக்கோ ஆளுபவர்களுக்கோ உரியதல்ல. அது, மக்களின் நலனை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். ஆனால், இலங்கையில் சட்டம் அவ்வாறுதான் நடைமுறையில் உள்ளதா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

சட்டம் ஆளுபவர்களின் கைகளில் இருக்கிறது; அவர்களின் நலனுக்காகச் செயற்படுகிறது. சட்டத்தை மக்களுக்கானதாக மாற்றுவது எப்படி என்று நாம் உரையாடல்களைத் தொடங்குவது அவசியம். ஏனெனில், சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில், சட்டம் யாருடைய கைகளில் இருந்து, யாருடைய நலன்களைப் பாதுகாத்து வந்துள்ளது என்பது வெளிப்படை.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு உள்ளமையானது, கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கம் அனைத்துக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ரணிலின் ஆதரவாளர்கள் ‘பகடிவதை’ என்ற ஆயுதத்தைத் தூக்கியுள்ளார்கள். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பகடிவதையை ஆதரிப்பதாகவும் அதனை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அதனடிப்படையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுவதை ஆதரிப்பதாகவும், சமூகஊடகங்களில் கருத்துகள் பரவிக் கிடக்கின்றன.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்றுண்டு. ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில், காலிமுகத்திடலில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, அதை ஆதரித்தவர்கள் தான் இவர்கள். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பியதை விரும்பி ஆதரித்த இவர்கள், ரணிலோ அவர்தம் கூட்டாளிகளோ நெருக்கடிக்கு உள்ளாவதை விரும்புவதில்லை. பல்வேறு வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ரணிலையும் அவர்தம் அரசாங்கத்தின் செயல்களையும் இவர்கள் ஆதரிக்கிறார்கள். இதை விளங்கிக் கொள்வது சிரமமல்ல.

இதற்கு ஒரு வர்க்க குணாம்சம் உண்டு. ராஜபக்‌ஷர்கள் இவர்களுடையவர்கள் அல்ல; ஆனால், ரணில் இவர்களில் ஒருவர். எனவே, ராஜபக்‌ஷர்களை எதிர்ப்போர், இவர்களுக்கு நண்பர்கள்; ஆனால், ரணிலை எதிர்ப்போர் இவர்களின் எதிரிகள்.

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பியது, இவர்களின் ‘டுவிட்டர்’ பதிவுகளோ ‘பேஸ்புக்’ இடுகைகளோ அல்ல. அயராது போராடி, கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் தடியடிகளையும் வாங்கிய இளைஞர்களின் தியாகமே அதைச் சாத்தியமாக்கியது. அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் மக்களின் கடமையாகும். அவர்கள் இத்தியாகத்தை சுயநலத்துக்காகச் செய்யவில்லை. இந்த நாட்டின் நலனுக்காகச் செய்தார்கள். எமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்துக்காகச் செய்தார்கள். அதை நாம் மறக்கலாகாது.

இப்போது அரசுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள், இலங்கையை மீண்டும் ஜனநாயகப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கான குரல்களேயாகும். அக்குரல்கள் ஜனநாயகத்தின் பெயரால் ஒலிக்கின்றன என்பது முரண்நகை.

இந்தப் பின்னணியிலேயே இலங்கை, தன் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. இரண்டு வெவ்வேறுபட்ட பாதைகள் எம்முன்னே உள்ளன. எதனை நாம் தெரிகிறோம் என்பதிலேயே, நாட்டின் ஜனநாயகமும் எமது எதிர்காலமும் தங்கியுள்ளது.

போராட்டக்காரர்களாலும் அவர்களுக்கு ஆதரவளித்த மக்களாலும் திறக்கப்பட்ட பாதையானது, ஜனநாயகத்தையும் பொறுப்புக்கூறலையும் வேண்டிநிற்கிறது. குறிப்பா,க சுதந்திரமடைந்தது முதல் மெதுமெதுவாக மோசமடைந்த ஜனநாயக மறுப்பு அரசியலானது, 1978க்குப் பின்னர் புதிய கட்டத்தை எட்டியது. இது நாட்டின் அரசியல் உயரடுக்கின் பல்வேறு பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட பல தசாப்தங்களாக ஜனநாயக மறுப்பையும் சர்வாதிகார இயல்புகளையும் கொண்டிருந்தது.

இதன் பின்னணியிலேயே அண்மைய மக்கள் போராட்டங்கள் திறந்துள்ள ஜனநாயகத்துக்கான பாதை முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் உள்ளன. இங்கு குறித்துச் சொல்ல வேண்டியது யாதெனில், இது யாருக்கு முக்கியமானது என்பதையே. ஒடுக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்ற அடித்தட்டு மக்களுக்கு இலங்கையை முழுமையான ஜனநாயகமாக மாற்றுவது தவிர்க்கவியலாதது.

இரண்டாவது பாதை நிறுவனமயப்பட்டுள்ள அரசியல் உயர் வர்க்கத்தின் தாராளவாத சர்வாதிகார திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இது சட்டத்தினதும் அரசியலமைப்பினதும் துணை கொண்டு நீதிமன்றம், காவல்துறை, அரச நிர்வாகம் ஆகியவற்றின் வழி தனது அரசியல் செயற்றிட்டத்தை முன்னெடுக்க முயல்கிறது. இது மேலாதிக்க அரசியல் உயரடுக்கின் விருப்பமான பாதையாகும்.

இவ்விரு பாதைத் தெரிவுகளும் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கான இரண்டு முற்றிலும் மாறுபட்ட அரசியல் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டுகால வரலாறானது, அரசியல் உயரடுக்கின் ஏதேச்சதிகாரத்தைக் காட்டி நிற்கிறது. ஒருபுறம் அரச நிறுவனங்கள் அதன் சுயாதீனத் தன்மையை இழந்துள்ளதோடு, அரசியல் மயமாகியுள்ளன.

இவ்விரு போக்குகளும் மிகவும் வலுவற்றனவாக நிறுவனங்களை மாற்றியுள்ளன. சாதாரண மக்களின் போக்கிடங்களாக இருந்தவை அரசியலினால் வழிநடத்தப்படும் அவலத்தை நாம் தினந்தினம் காண்கிறோம். ஆதிக்கம் செலுத்தும் அரசியல் வர்க்கம் பல வருட அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றுள்ளது, அது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதிசெய்து, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் தனக்கு அடிபணியச் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது.

இப்போது அது அரசியல் மற்றும் அரசியல் அதிகாரத்தின் ஒட்டுமொத்த அமைப்பாக மாறிவிட்டது, சீர்திருத்த முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இது அரசியல் அதிகாரத்தின் கரங்களை இன்னமும் பலப்படுத்தி கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றியது.

கேள்வி கேட்கவே இயலாது என்ற நிலையில் அரசியல் அதிகாரம் கோலோட்சிய நிலையில், அண்மைய மக்கள் எழுச்சி, புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது. அரசியல் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்த முடியும்; மக்களின் முன் அடிபணிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சாதாரண குடிமக்களின் சமீபத்திய எதிர்ப்பு இயக்கம் உருவாக்கியுள்ள புதிய நம்பிக்கை என்பது, புதிய அரசியல் கலாசாரத்துள் இலங்கையை கூட்டிச் செல்ல வல்லது.

இதைக் கண்டு பலர் பதறுகிறார்கள். அதிகார வர்க்கம் பதறுகிறது, அதன் அடிவருடிகள் அஞ்சுகிறார்கள்; உயர்குடிகள் ஏக்கமடைக்கிறார்கள், அவர்தம் விசுவாசிகள் கலங்குகிறார்கள். இன்று அதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது சமூகத்தின் பல அடுக்குகளிடையே நம்பக்கூடியதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாறிவிட்டது. நாட்டை மறு-ஜனநாயகமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளார்கள்.

ஆனால், இன்று எம்முன்னுள்ள சவால் யாதெனில் இருப்பினும், தற்போதைய கட்டத்தில் மக்களுக்கான நலனுக்கான ‘கட்டமைப்பு மாற்றம்’ என்ற கோரிக்கைக்கான பாதை, சற்று மங்கலானதாகவே தெரிகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, இது பாரிய மக்கள் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தது. இன்று அந்நிலைமை இல்லை. அந்த நம்பிக்கையும் உற்சாகமும் ஏன் எவ்வாறு இழக்கப்பட்டன என்பது பற்றி ஆழ்ந்து யோசிப்பது நல்லது.

தற்காலிக விலைக்குறைப்புகளும் சலுகைகளும் மக்கள் போராடிய சமூக நீதியையும், சமூகநல அரசையும் மீட்டுவிடப் போவதில்லை. களவாடப்பட்ட செல்வங்கள் மீட்கப்படப் போவதில்லை. விற்கப்பட்ட நாட்டின் வளங்கள் மீளப்பெறப்படப் போவதில்லை.

போராடிய மக்களின் மீதான வன்முறைக்கு, இன்று மௌனமான இருப்பதன் ஊடு, அனுமதி அளிப்போமாயின் இதைவிட மோசமான அடக்குமுறை நம்மீது நீளும்போது, எமக்காகக் குரல்கொடுக்க யாரும் இருக்கப் போவதில்லை. மீண்டுமொருமுறை மார்ட்டின் நெய்மோலரின் கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன்:

முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளைக் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துப் பேசவில்லை
காரணம், நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் சோஷலிஸ்டுகளைக் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துப் பேசவில்லை
காரணம், நான் சோஷலிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கத்தினரைக் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துப் பேசவில்லை
காரணம், நான் தொழிற்சங்கத்தினன் அல்ல.

பிறகு அவர்கள் யூதர்களைக் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துப் பேசவில்லை
காரணம் நான் யூதன் அல்ல.

கடைசியாக அவர்கள் என்னைக் தேடி வந்தபோது
எனக்காகப் பேச அங்கே எவருமே இல்லை!

You might also like

Leave A Reply

Your email address will not be published.