லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் தகர்க்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள், ஆயுதக்கிடங்குகள் ஆகியவற்றை, தங்களது படைகள் கண்டுபிடித்து தகர்த்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஜூலை 9) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேபோன்று, லப்பவுனே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிகுண்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும், நிலத்தடி ஆயுதக்கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் அப்பகுதிகளில் ஹிஸ்புல்லா படையினர் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து ஹிஸ்புல்லா தரப்பில் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, இருதரப்புக்கும் இடையில் கடந்த நவம்பர் மாதம் முதல் போர்நிறுத்தம் அமலிலுள்ள நிலையிலும், லெபனானில் ஹிஸ்புல்லாவின் கட்டமைப்புகளைத் தகர்ப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றது.
இருப்பினும், தெற்கு லெபனானில் உள்ள வீடுகள், மக்களின் அத்தியாவசிய கட்டமைப்புகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.