;
Athirady Tamil News

இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும் !! (கட்டுரை)

0

இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல, ‘இலவுகாத்த கிளி’யாக, நிலைமை சீராகும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இன்று எமது தேசிய இனப்பிரச்சினை, அனைத்துத் தரப்புகளாலும் அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சிங்கள மேலாதிக்கத்தாலும் அதன் ஒடுக்குமுறை அணுகுமுறைகளாலும் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய தேசிய இனங்கள் மீதும் பறங்கியர், வேடர்கள் ஆகிய சிறிய சமூகங்கள் மீதும் சொல்லொணா துயரங்களும் கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயத்துறையில் நவதாராளவாத பொருளாதாரத் திட்டங்கள், ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதன் விளைவுகளை இப்போது நாம் காண்கிறோம். அவற்றின் பாதிப்புகள் காரணமாக, மக்கள் தொடர்ச்சியாக அவற்றை எதிர்த்து வருகின்றபோதும் தொடர்ச்சியான அரசாங்கங்கள் அவற்றை நிறுத்தாது முன்னெடுத்தும் வந்தன. தன்னிறைவை அடிப்படையாகக் கொண்ட தேசிய பொருளாதாரத்தின் உயிரணுக்களை, ‘உலகமயமாதல்’ என்ற நிகழ்ச்சி நிரல் அழித்துவிட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தரவர்க்கத்தினர் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் மோசமடைந்து கொண்டிருக்கும் தாராள தனியார்மய சூழ்நிலையானது, எதிர்கால சந்ததிக்கு இந்நாட்டு வளங்கள் விட்டு வைக்கப்படாது என்பதை உறுதி செய்கின்றன.

இலங்கையரின் நல்வாழ்க்கை, சுயகௌரவம், சுயமரியாதை, சொத்துகள், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றைப் பாதுகாப்பதில் அரசியலமைப்பு, ஜனாதிபதி ஆட்சிமுறை, பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகியன முழுமையாகத் தோல்வியடைந்துள்ளன.

மக்கள், ‘காய்ந்த சருகாக’ மாறி வருகிறார்கள். அதன் மீது சிறிய தீப்பொறி பட்டாலேயே பெரிய காட்டுத்தீயை உண்டாக்கி விடும். அவ்வாறான ஒரு சிறிய தீயே, காலிமுகத்திடலை மையங்கொண்ட போராட்டமாகும்.

இன்றைய நெருக்கடி உயர், மத்தியதர வர்க்கத்தினருக்கும் பெரும் சொத்துடைய சிலருக்கும் கூட நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. அதனால், சாதாரண மக்கள் மட்டுமன்றி ஓரளவுக்கு வசதிவாய்ப்புகளுடன் வாழ்கின்றவர்கள் கூட, மாற்று அரசியல் நடவடிக்கைகள் மூலமான மாற்றங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். அத்தகைய மாற்று அரசியல் சாத்தியமானதா?

இலங்கையின் ஆளும் அதிகார அடுக்கின் பண்பு, ஏகாதிபத்தியத்தின் வாடிக்கையாளர்களாக செயற்படுவதையே பிரதிபலிக்கின்றது. இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுகின்ற அரசாங்கத்தின் செயல்கள், இதன் அண்மைய உதாரணமாகும்.

அரசியல், சமூகம் ஆகிய தளங்களில், அரசின் கொள்கைகள், வன்முறை, யுத்தம், இனக்குரோதம், மதவெறி என்பனவற்றையே பிரதான அணுகுமுறையாகக் கொண்டுள்ளன. நிலைமைகளை சீர்செய்வதற்கான சீர்திருத்தங்களையோ இணக்கப்பாடுகளையோ ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில், இன்றைய அதிகார அடுக்கின் தலைமைகள் இல்லை.

இத்தகைய அதிகார அடுக்குக்கு எதிராகவும் உறுதியாகவும் முன்னெடுக்க வேண்டிய போராட்ட வழிமுறைகளுக்கும் பழைய அரசியல் ஸ்தாபனங்களின் நடைமுறைகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.

பழைய, சுரண்டுகின்ற பிற்போக்கு வர்க்கங்களுக்கும் இன்றைய கொள்ளைக்கார அதிகார அடுக்குகளுக்கும் இடையே, அவற்றின் ஆட்சிமுறை மூலோபாயம், தந்திரோபாயம் போன்றவற்றில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்களைப் பார்க்கின்ற போது, மக்கள் சார்பான இன்றைய போராட்ட அணுகுமுறைகள், பொருத்தமானவையா என்ற கேள்வி எழுவது இயற்கையானது.

எனவே, மக்களது பழைய அணுகுமுறைகளை முற்றாக மாற்றி, புதிய முயற்சிகளும் புதிய மாதிரியான போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற வர்க்கத்தினரின் தொழிற்சங்க இயக்கங்கள், வேலை நிறுத்தப்போராட்டங்கள், தேர்தல் அரசியல்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் போன்றவை இன்றைய அதிகார அடுக்கின் வக்கிரம் நிறைந்த வன்முறைகளுடன் கூடிய அணுகுமுறைகளையே பதிலிறுப்பாகத் தந்துள்ளன. இவை மக்களிடையே எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கைங்கரியங்களில் இருந்து, மாறுபட்ட விதத்தில் தேர்தல் களங்களுக்கு வெளியிலும் தொழிற்சங்க வரையறைகளுக்கு வெளியிலும், பல போராட்டங்கள் பாரம்பரிய பிரசார ரீதியான விதத்திலன்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.

1971, 1988 ஜே.வி.பியின் ஆயுத நடவடிக்கைகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டமும், இனிமேல் ஒரு போதும் அவ்வாறான போராட்டங்கள் உருவாகக் கூடாது என்ற விரக்தி நிலையை மக்களிடம் தோற்றுவித்துள்ளன. இதில் அதிகார அடுக்கின் சக்திகள் வெற்றி பெற்றுள்ளதை மறுக்க முடியாது.

ஆனால், சரியான போராட்டத்தால், தற்போதைய ஆட்சிமுறையும் ஆளும் வர்க்கங்களும் செயலிழக்கச் செய்யப்பட்டு, இலங்கையில் அர்த்தமுள்ள ஜனநாயக ஆட்சிமுறை ஒன்றை ஏற்படுத்துவதைத் தவிர, வேறு தெரிவோ மாற்றுத்திட்டமோ ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இல்லை.

அதற்கு, தொடர்ச்சியான வெகுஜனப் போராட்டங்கள், புதிய விதத்தில் புதிய வகை மாதிரியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு வரலாற்றில் கற்ற பாடங்களை மீட்டுப்பார்ப்பதும் அவசியமானது.

தலைமைத்துவங்களின் தவறுகளால், 1953 ஓகஸ்ட் 12இல் மக்கள் பெருமளவில் பங்கெடுத்த ஹர்த்தால் போராட்டம், வெகுஜன எழுச்சியாக வளரமுடியாமல் போனது பற்றிய பட்டறிவு எமக்கு இருக்கிறது. 1980 ஜூலை வேலை நிறுத்தப் போராட்டம் உட்பட, பல விதமான வேலைநிறுத்தப் போராட்டங்களும் மக்களின் எதிர்ப்பு இயக்கங்களும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்விளைவுகளைத் தந்த போலி இடதுசாரி சக்திகளினதும், தீயநோக்குடைய ‘என்.ஜி.ஓ’ அமைப்புகளினதும் நடவடிக்கைகளால் எதிரிடையாக அதிகார அடுக்கின் இருப்புக்கு அவை உதவி புரிந்துள்ளன.

அதேவேளை, வெகுஜன இயக்கங்களாலும் எதிர்ப்பு போராட்டங்களாலும் சில உரிமைகள் மக்களுக்கு கிடைத்துள்ளன என்பதையும் குறிப்பிடத்தக்களவான சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், அவற்றின் தலைமைத்துவங்கள் மக்கள் விரோத சக்திகளின் ஏகபோகத்துக்குள் மட்டுப்பட்டே இருந்தன. பொதுவாக, ஐக்கிய தேசிய கட்சியினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு, பொதுவாக இப்போராட்டங்கள் பயன்பட்டன. தமக்கு வாய்ப்பளிக்கும் வரை, அப்போராட்டங்கள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.

இன்றைய சூழ்நிலையில், பொதுமக்கள் தமது அரசியல் எதிரியான அதிகார அடுக்குக்கு, நேருக்கு நேரெதிராக நிற்கும் அரசியல் சூழ்நிலையே நிலவுகிறது. அந்த எதிர்ப்பு, அடிப்படையான சமூகமாற்றத்துக்குக் குறையாத மாற்றத்தை வேண்டி, அதற்கான தீவிரமான அரசியல் தலைமைத்துவ மாற்றத்தின் கீழ், வெகுவிரைவில் புதிய மக்கள் எழுச்சியை வேண்டிநிற்கிறது.

இந்த நிலைமை முதிர்ச்சியடைந்து, வெற்றிகரமான சூழ்நிலை ஏற்படுவது அனைத்து இலங்கை மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. மக்களால் வேண்டப்படாத, அவர்களின் பங்களிப்பில்லாத மாற்றம் சாத்தியமானதல்ல.

வெகுஜன எழுச்சியை, போராட்ட மார்க்கமாக ஏற்றுக்கொள்ளும் நாம், சமூகமாற்றத்துக்கான மக்கள் எழுச்சியின் புதிய அர்த்தத்தை, புதிய வடிவத்தை, புதிய இயங்கு முறையைப் பற்றி எமது கவனத்தை செலுத்த வேண்டியவர்களாகின்றோம்.

மக்கள் எழுச்சியை முறியடிக்க முடியாதளவுக்கு மாற்று பொருளாதார தற்காப்பு, வினை-எதிர்வினை, போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்தும் பண்பாட்டு முறைமை போன்றனவற்றை தயாரிப்பது அவசியம். ஆகக்கூடுதலான மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கும் வெகுஜன எழுச்சி, மக்களின் நலன்களுக்கான அம்சங்களைக் கொண்டதானதாக அமைய முடியும். வெகுஜன எழுச்சிகளை எவரும் வலுக்கட்டாயமாக ஏற்படுத்த முடியாது. ஒரு வெறும் அறிவிப்பின் மூலம் அல்லது துண்டுப்பிரசுர சுவரொட்டி அறைகூவல்களின் மூலம் வெகுஜனப் போராட்டங்களை வெகுஜன எழுச்சியாக ஏற்படுத்த முடியாது.

தேவையான அடிப்படையான நிலைமைகள் ஏற்படும் போது, முரண்பாடுகள் கூர்மையடையும் போது வெகுஜன எழுச்சி மேலெழும்புவது தவிர்க்க இயலாதது. சமூகமாற்றத்துக்கான வெகுஜன எழுச்சியை, எவரும் வலுக்காட்டாயமாக ஏற்படுத்த முடியாது.

அவ்வாறான, தயாரான சூழ்நிலை இல்லாத போது, மக்களின் எதிரிகள் வெகுஜனப் போராட்டங்களை அவர்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டு, அவற்றை செயலிழக்கச் செய்து, அவற்றின் இலக்கான சமூக மாற்றத்துக்குத் தடையாக இருப்பார்கள்.

இலங்கை வரலாற்றில், அதிகமான வெகுஜனப் போராட்டங்கள் இரண்டு பெரிய கட்சிகளான ஐ.தே.கவையும் சுதந்திரக் கட்சியையும் மாறி மாறி ஆட்சிக்குக் கொண்டுவரவே பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘என்.ஜி.ஓ’க்கள், அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு, வெகுஜனப் போராட்டங்களை பயன்படுத்தியுள்ளன. அவை அதிகாரவர்க்கத்துக்கு உதவுவதாகவே முடிந்துள்ளன. இனியும் அவ்வாறே நிகழுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே!

You might also like

Leave A Reply

Your email address will not be published.