;
Athirady Tamil News

மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு!!

0

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள இந்த நிலையில் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர்.

கொரோனா இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து வருகின்ற விவசாயிகள் தொடர்ச்சியாக உரப்பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருவதுடன் இடையில் காலநிலை மாற்றத்தினையும் எதிர் கொண்டு விவசாய நடவடிக்கைகளை பாரிய சிரமத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தருணத்தில் நுவரெலியா வெஸ்டவோட் பிரதேச விவசாயிகள் உற்பத்தி செய்து வரும் மரக்கறி வகைகளை பாராமரிப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

தாம் இப்பிரதேசத்தில் பாரியளவில் விவசாயத்தில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கும் விவசாயிகள் கடந்த காலங்களில் விவசாயத்தினால் கூடுதலான நன்மையை பெற்று வாழ்வாதாரத்தை ஊக்கப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் விவசாயத்துறையை ஊக்குவிக்க எதிர்கால திட்டம் ஒன்றை முன்கூட்டியே அறிவிக்காத அரசாங்கம் திடீரென தான்தோன்றி தனமாக உரத்தை தடை செய்து பாரிய சிக்கலை கடந்த காலங்களில் உண்டாக்கியது.

இதன் விளைவு தொடர்ச்சியாக விவசாயிகளை பாதித்து வரும் நிலையில் நுவரெலியாவில் வெஸ்டவோட் பிரதேச விவசாயிகளும் பாரியளவில் பாதித்து வரும் நிலை இன்று உச்சம் பெற்றுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக உரப்பிரச்சினையே பிரதான பிரச்சினையாக உள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் பயிர்களுக்கு ஏற்ற உரங்களை வழங்குவதில் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் 50 கிலோ கிராம் அடங்கிய இரசாயன உரப் பொதியை 1,500 ரூபாய் என்ற நிர்ணைக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக 05 ஆயிரம் தொடக்கம் 06 ஆயிரம் ரூபாய்க்கு விற்பணை செய்யப்படுவதால் அதிக விலைக் கொடுத்து வாங்கி விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு உர பிரச்சினைக்கு முகம் கொடுத்து வாழ்வாதார தொழிலான விவசாயத்தை முன்னெடுக்கின்ற வேளையில் தற்போது மரக்கறிகளின் விலைகள் ஏற்றம் கண்டாலும் மரக்கறிகளை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்து சந்தைக்கு அனுப்பி இலாபம் பெற முடியாது உரத்தட்டுப்பாடு தம்மை நசுக்கி வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விலையேற்றம் உயர்ந்துள்ளதாகவும், இரசாயன உரத்தட்டுப்பாட்டை நீக்க அரசு முன்வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் மரக்கறி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியுமென வெஸ்வாடோ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் வீதியோரங்களில் மரக்கரி வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.