;
Athirady Tamil News

பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை தொடர்ந்தும்…!!

0

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பொது மக்களை விழிப்புணர்வூட்டும், ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பதி முன்வைத்த யோசனை குறித்துப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி போடும் பணியில் அரசியல் அதிகாரிகளின் தலையீடு காரணமாக ஆரம்ப காலத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் தற்போது சில பிரதேசங்களில் அரசியல் அதிகாரிகளின் ஆதரவினால் தடுப்பூசி மிகவும் வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பூஸ்டர் தடுப்பூசியை எடுக்க வேண்டாம் என சிலர் திட்டமிட்ட ரீதியாக முன்னெடுக்கும் பிரசாரங்கள் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சகல ஊடக நிறுவனங்கள், அரசாங்கத் துறை மற்றும் அரசியல்துறை இணைந்து செயற்பட்டால் தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நகரசபைப் பிரிவிற்குள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் பல காணப்படும் போது சுகாதார வைத்திய அதிகாரியின் பணி மூப்பைத் தீர்மானிப்பது தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு நகரசபை பிரிவுக்குள் சுகாதார வைத்திய அதிகாரிகள் பலர் பணியாற்றும்போது பொதுநலன் கருதி தீர்மானங்களை எடுப்பது குறித்த பிரச்சினை காணப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.

பண்டாரவளை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர், தியத்தலாவ மற்றும் பதுளை ஆகிய இரண்டு வைத்தியசாலைகள் இருக்கின்ற போதும் பண்டாரவளை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதில் சிக்கல் இருப்பதாகக் குறிப்பிட்டார். மாறாக தியத்தலாவை வைத்தியசாலையில் அமைக்கப்படாத பிரிவுகளே பண்டாரவளை வைத்தியசாலையில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பண்டாரவளை வைத்தியசாலைக்குச் சென்று இப்பிரச்சினை குறித்து ஆராய்வதாக அமைச்சர் இங்கு கூறினார்.

மாத்தறை பொது வைத்தியசாலையின் சி.டி ஸ்கான் இயந்திரம் பழுதடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பண்டாரகம ஒசுசலவின் மேல் மாடி பண்டாரகம வைத்தியசாலையினால் பயன்படுத்தப்படுவதால் ஒசுசலவின் ஔடதங்களைக் களஞ்சியப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. வைத்தியசாலைக்குப் புதிய கட்டடம் அமைக்கப்பட்ட பின்னர் குறித்த மேல் மாடியை மீண்டும் வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தாதியர் பணியாளர்களுக்கு ஆட்களை சேர்ப்பதில் தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் புதிய வெற்றிடங்களை உருவாக்குவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே, மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.