உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்…?
தென்அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி.மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு. இதன் மக்கள்தொகை 2.90 கோடி மட்டுமே. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுலா, தினமும் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு கச்சா எண்ணெய்யின் விலை மிகக் குறைவு. மேலும், எசெக்விபோ பிராந்தியத்துக்குப் பக்கத்திலுள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் இருப்பதை அமெரிக்காவின் “எக்ஸôன்மொபில்’ என்னும் நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், வெனிசுலா அதிபர் மடூரோவின் அரசை “போதைப் பொருள் பயங்கரவாத அமைப்பாக’ அறிவித்தார். மடூரோவும் போதைப் பொருள் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும், வெனிசுலாவுக்கு அருகே கரீபியன் கடலில் இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவில் படைகளைக் குவித்த டிரம்ப், கிழக்குப் பசிபிக் கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கி அழிக்க உத்தரவிட்டார். அந்தப் படகுகளில் போதைப் பொருள்கள்தான் கடத்தி வரப்படுகின்றன என்பதற்கான உரிய ஆதாரங்களை வெளியிடாமல் அமெரிக்கா நடத்திய 35 தாக்குதல்களில் இதுவரை 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்று உலக நாடுகள் விமர்சிக்கின்றன.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டி அதிபர் மடூரோவும், அவரது மனைவியும் அமெரிக்காவால் சிறை பிடிக்கப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது, சர்வதேச சட்டத்தை மீறிய செயல். இது இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் உலக அமைதிக்கும், நிலைத்த தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்ற நாடுகளுக்கு எதிராக இப்போது கருத்துகளைக் கூறி வருகிறார். குறிப்பாக, கிரீன்லாந்து, கொலம்பியா, மெக்ஸிகோ மற்றும் கியூபா ஆகிய நாடுகளின் மீது அவரது பார்வை திரும்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது, உலக நாடுகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் இதுதான்.
அமெரிக்கா ஏற்கெனவே கிரீன்லாந்தில் ஒரு ராணுவ தளத்தைக் கொண்டுள்ளது. “பிட்டுஃபிக்’ விண்வெளித் தளம் கிரீன்லாந்தில்தான் உள்ளது. “அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து முழுவதும் தேவை. அந்தப் பகுதி முழுவதும் ரஷியா மற்றும் சீனக் கப்பல்களால் சூழப்பட்டுள்ளது’ என சமீபத்திய செய்தியாளர்களின் சந்திப்பின்போது டிரம்ப் தெரிவித்தார். டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான பரந்த ஆர்க்டிக் தீவு, அமெரிக்காவின் வடகிழக்கில் சுமார் 3,200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அறிதிறன்பேசிகள், மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவ வன்பொருள் உற்பத்திக்குத் தேவையான அரியவகை மண் தாதுக்கள் நிறைந்துள்ளன. தற்போது, சீனாவின் அரிய மண் தாதுக்களின் உற்பத்தி அமெரிக்காவைவிட அதிகமாகவுள்ளது.
கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்சன், தீவின் மீதான அமெரிக்க கட்டுப்பாட்டின் கருத்தை ஒரு “கற்பனை’ என விமர்சித்து டிரம்ப்புக்கு பதிலளித்துள்ளார். “நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கிறோம். அதே சமயம், அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கில், வெனிசுலாவில் அண்டை நாடான கொலம்பியா கணிசமான எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளது. தங்கம், வெள்ளி, மரகதம், பிளாட்டினம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது. கொலம்பியா போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் டிரம்ப். குறிப்பாக, கொலம்பியா அதிபர் மீது மறைமுகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்.
வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை “உங்கள் கழுதையைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என டிரம்ப் எச்சரித்தது, அந்த நாட்டை எரிச்சலடையச் செய்துள்ளது.
கொலம்பியா அதிபர் பெட்ரோ, தன்னிச்சையாக “கார்டெல்ஸ்’ எனப்படும் போட்டி போட்டுக் கொள்ளாமல் பொருள்களின் விலைகளை நிர்ணயித்து லாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் நிறுவனங்களை ஆதரிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி, கடந்த அக்டோபரில் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தடைகளை விதித்தது.
“என்னை அழைத்துச் செல்லுங்கள்; கைது செய்யுங்கள்; உங்களுக்காக நான் இங்கே காத்திருக்கிறேன். டிரம்ப், நீங்கள் ஒரு கோழை. நீங்கள் (அமெரிக்கா) குண்டு வீசினால், நாங்கள் கொரில்லாக்களாக மாறுவோம். நான் மீண்டும் ஆயுதத்தைத் தொட மாட்டேன் என சபதம் செய்துள்ளேன். ஆனால், தாய்நாட்டுக்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்துவேன்’ என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
2016-ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்தவுடனேயே “மெக்ஸிகோவின் தெற்கு எல்லையில் சுவரைக் கட்டுங்கள்’ என டிரம்ப் அழைப்பு விடுத்தார். 2025-ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் நாளன்று மெக்ஸிகோ வளைகுடாவை “அமெரிக்கா வளைகுடா’ என்று மறுபெயரிடுவதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையொப்பமிட்டார். அமெரிக்க எல்லையைப் பாதுகாக்க மெக்ஸிகோ போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மெக்ஸிகோ வழியாகவே அதிகமாக நடக்கிறது என்றும், இதனால் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மெக்ஸிகோ தேவையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கைளைச் சந்திக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார். ஆனால், அதிபர் கிளாடியா ஷீன்பாம், மெக்ஸிகன் மண்ணில் எந்தவொரு அமெரிக்க ராணுவ நடவடிக்கையும் இல்லையென பகிரங்கமாக மறுத்துள்ளார்.
ஃபுளோரிடாவிலிருந்து வெறும் 145 கி.மீ. தெற்கேவுள்ள தீவு நாடு கியூபா. 1960-களின் முற்பகுதியில் இருந்து அமெரிக்கத் தடைகளின் கீழுள்ளது. தடையை மீறி சட்ட விரோதமாக கியூபாவுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்றதாகக் கூறி, வெனிசுலாவின் “ஸ்கிப்பர்’ என்ற மிகப் பெரிய கப்பலை அமெரிக்காவின் கடலோரக் காவல் படை கடந்த டிச.10}ஆம் தேதி பறிமுதல் செய்தது. வெனிசுலா அரசு மானிய விலையில் கியூபாவுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது. வெனிசுலாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை சீனாவுக்கு மறுவிற்பனை செய்வதன் மூலம் கியூபா பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது.
பல ஆண்டுகளாக, கியூபாவுக்கு வெனிசுலா மானிய விலையில் எண்ணெய் அனுப்பி வருவதற்கு, நன்றிக் கடனாக வெனிசுலாவுக்கு மருத்துவர்களையும், பாதுகாப்பு நிபுணர்களையும் அனுப்பி வருகிறது கியூபா. இதுவும் அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. கியூபா வீழ்ச்சியடையத் தயாராக இருப்பதால், அங்கு அமெரிக்க ராணுவத் தலையீடு தேவையில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கியூபாவின் அரசமைப்பு தோல்வி அடைந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மக்கள் கடுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கியூபா அரசு இன்னும் பழைய கொள்கைகளில் சிக்கி இருப்பதாகவும், மாற்றத்தை ஏற்காதவரை, அந்த நாடு முன்னேற முடியாது என்றும் அவர் விமர்சித்தார். விரைவில், கியூபாவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் டிரம்ப் ஆருடம் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த விமர்சனங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது அமெரிக்கா கொண்டுள்ள காழ்ப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக உலக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கிரீன்லாந்து, மெக்ஸிகோ, கொலம்பியா, கியூபா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகள் வரும் நாள்களில் மேலும் சிக்கலான நிலையை எட்டக்கூடும் என்றும் உலக நாடுகள் அஞ்சுகின்றன.
வெனிசுலா அதிபர் மடுரோவை அதிரடி ராணுவ நடவடிக்கையின் மூலம் அமெரிக்கா கைது செய்ததுபோல, ஈரான் அரசையும் அமெரிக்கா வீழ்த்த வேண்டும் என்று மக்கள் அங்கு உள்நாட்டு கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது வளைகுடா நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடித்து, அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் இணைந்து செயல்பட லத்தீன் அமெரிக்க நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.