குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய ஆம்லெட்டும் செயற்கை நுண்ணறிவும்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், சவாலான ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு துண்டு ஆம்லெட்டும், செயற்கை நுண்ணறிவும் உதவியுள்ளன.
ஆம்லெட்டும் செயற்கை நுண்ணறிவும் செய்த உதவி
மத்தியப்பிரதேசத்திலுள்ள குவாலியர் என்னுமிடத்தில், முகம் முற்றிலும் சிதைந்த நிலையில், அரைகுறை ஆடையுடன் இளம்பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் ஆவணங்களும் எதுவும் இல்லாமல், அவரது முகமும் சிதைந்த நிலையில், அவரை அடையாளம் காண்பது சவாலான ஒரு விடயமாகியுள்ளது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் அவரது முகத்தின் புகைப்படத்தை உருவாக்கிய பொலிசார், அதன் உதவியுடன் அவரை அடையாளம் காணும் முயற்சியைத் துவக்கியுள்ளார்கள்.
அப்போது, உயிரிழந்த அந்தப் பெண், Tikamgarh என்னுமிடத்தைச் சேர்ந்த சங்கீதா என்பதும், அவர் தன் கணவரை விட்டு விட்டு வேறொரு ஆணுடன் குவாலியரில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையில், சங்கீதாவின் உடல் அருகே ஒரு துண்டு ஆம்லெட் கிடப்பதைக் கண்ட பொலிசார், அந்த பகுதியில் ஆம்லெட் விற்பனை செய்யும் கடைகளில் அவரது புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கத் துவங்கியுள்ளார்கள்.
அப்போது, ஆம்லெட் விற்பனை செய்யும் ஒருவர், தான் அந்தப் பெண்ணுக்கு ஆம்லெட் போட்டுக் கொடுத்ததாக கூறியதுடன், அவருடன் ஒரு ஆணும் இருந்ததாகக் கூறியுள்ளார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியிலுள்ள CCTV கமெராக்களை பொலிசார் ஆராய, சம்பந்தப்பட்ட நபர் குவாலியர் ரயில் நிலையம் நோக்கிச் சென்றது தெரியவந்துள்ளது.
நேற்று, குவாலியர் ரயில் நிலையத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் சச்சின் சென் (26).
பொலிஸ் விசாரணையின்போது, தான் சங்கீதாவை வன்புணர்ந்து கொலை செய்ததை சச்சின் ஒப்புக்கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இதற்கிடையில், ஒரு ஆம்லெட், செயற்கை நுண்ணறிவு முதலான விடயங்களின் உதவியுடன் ஒரு குற்றவாளியை பொலிசார் பிடித்த விடயம் ஊடகங்களில் கவனம் ஈர்த்துவருகிறது.