;
Athirady Tamil News

அமெரிக்காவில் நடந்த ஆந்திர ஜோடி திருமணம்: தியேட்டரில் ஒளிபரப்பு- பெற்றோர், உறவினர்கள் வாழ்த்தினர்..!!

0

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பர்வத ரெட்டி. இவரது மனைவி ஜோதி. இவர்களின் மகன் ரோஷித் ரெட்டி (வயது 23). இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

திருப்பதி அடுத்த நாயுடு பேட்டையை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி,சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதா (21). அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து வருகிறார். ரோஷித் ரெட்டி, ரிஷிதா இருவரும் அமெரிக்காவில் காதலித்து வந்தனர்.

இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். இருவரது பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

மே 22-ந் தேதி அமெரிக்காவில் திருமணம் நடத்த முடிவு செய்து பத்திரிகை அடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்தனர்.

அமெரிக்காவில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணமக்களின் பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பித்தனர்.

விசா கிடைக்காததால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாததால் மணமக்களின் பெற்றோர் விரக்தி அடைந்தனர். இதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணத்தை நடத்த இருவீட்டாரின் பெற்றோர்களும் முடிவுசெய்தனர்.

மீண்டும் திருமண பத்திரிகை அடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்தனர். நாயுடு பேட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாகுபலி சினிமா தியேட்டரை வாடகைக்கு எடுத்தனர்.

தியேட்டரில் முகப்பில் வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி திருமணம் மண்டபம் போல் அலங்கரித்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

அதிகாலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திரையில் மணமக்கள் பட்டு உடை உடுத்தி மணக்கோலத்தில் மணமேடைக்கு வரும் காட்சிகள் திரையிடப்பட்டன. புரோகிதர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓத மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தபடி மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்ச்சி முழுவதையும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டு ரசித்தனர்.

இதனால் திருமணத்தில் நேரடியாக கலந்து கொண்டது போல் உணர்வு இருந்ததாக திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். மணமக்களின் பெற்றோருக்கு விசா கிடைக்காததால் ஆன்லைனில் திருமணம் நடந்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.