;
Athirady Tamil News

ஷண்முகா ஹபாயா வழக்கு – கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி பிணையில் விடுதலை!!

0

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் கல்லூரி அதிபர் இன்று (4) இரண்டரை லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க சென்ற பெப்ரவரி மாதம் 02ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸை கடமையேற்க விடாது பல குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் திருகோணமலை திரு ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றால் அனுப்பப்பட்ட அழைப்பாணையினைத் தொடர்ந்து வழக்கு இன்று (4) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதிபருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. இரு தரப்பு சட்டத்தரணிகளின் கடுமையான வாதப்பிரதி வாதங்களைத் தொடர்ந்து வழக்கு நீதிபதியினால் விசாரணைக்கு (Trial) எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸ்ஸான் றுஷ்தி, ஸாதிர் முகம்மட் மற்றும் எம்.எம்.ஏ.சுபாயிர் ஆகியோர் தெரிவாகி வருகின்றனர்.

குறிப்பிட்ட இவ்வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரியை நீதிமன்று குற்றவாளியாகக் காணூமிடத்து இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள் 183 மற்றும் 184 இன் கீழ் சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷண்முஹா ஹபாயா விவகாரத்தில் ஆரம்பம் தொட்டு குரல்கள் இயக்கம் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.