;
Athirady Tamil News

தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: சமையல்காரர், கண்டக்டர், ஆட்டோ டிரைவர் ரூ.200 கோடிக்கு அதிபதி ஆனது எப்படி..!!

0

உத்தரகாண்ட் மாநில அரசின் சார்பில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் கடந்தாண்டு 854 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிலர் மீது டேராடூன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தலைமையில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து தேர்வை ரத்து செய்வதாக முதல்-மந்திரி அறிவித்தார்.

மேலும், இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. பிரமுகர் ஹகம் சிங்கை அக்கட்சி நீக்கியது. இதற்கிடையே தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் செயலாளர் சந்தோஷ் படோனி, தனது பொறுப்பில் அலட்சியம் காட்டியதற்காக அவரை சஸ்பெண்டு செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் மோசடியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கசிந்த வினாத்தாள்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு விற்கப்பட்டு உள்ளது. ஒரு வினாத்தாளை ரூ.10 முதல் 15 லட்சம் வரை விற்றுள்ளனர். அந்த வகையில் ரூ.200 கோடி வரை சுருட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். லக்னோவை தலைமையாக கொண்ட டெக்-சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் மூலம் காகிதத்தின் நகல் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு ஹகம் சிங், அவரது நெருங்கிய உதவியாளரும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கேந்திரபால், சந்தன் மன்ரல், மனோஜ் ஜோஷி மற்றும் ஜகதீஷ் கோஸ்வாமி ஆகியோர் மூளையாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் மோசடி செய்த பணத்தில் ரூ.50 கோடி வரை சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். ஹகம்சிங் உத்தரகாசி மாவட்டத்தை சேர்ந்தவர்.

இந்த வழக்கில் அவர் 18-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார். 2002-ம் ஆண்டு மாஸ்திரேட்டு ஒருவரிடம் சமையல்காரராக வேலைக்கு சேர்ந்த இவர் தனது மோசடிகள் மூலம் பல கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார். அவர் ஹரித்வாரில் தங்கியிருந்தபோது சில அரசியல்வாதிகளை சந்தித்து படிப்படியாக அரசியலில் நுழைந்தார். உத்தர்காஷி ஜிலா பஞ்சாயத்தில் உறுப்பினராவதற்கு முன்பு, ஹகம் 2008-2013 வரை உத்தரகாசியில் உள்ள லிவாரி கிராமத்தின் தலைவராக இருந்தார். புனித நகரத்தில் வசிக்கும் போது, ​​2011-ம் ஆண்டு, உ.பி.யைச் சேர்ந்த கேந்த்ராபாலையும் சந்தித்தார்.

அவரது உதவியுடன், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அதிக தொகைக்கு தேர்வர்களிடம் விற்கத் தொடங்கினார். சாதாரண சமையல்காரராக இருந்து இன்று பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதி ஆகியுள்ளார். கைதான மோசடி மன்னன் கேந்திரபால் உ.பி., தாம்பூரில் வசிப்பவர். வினாத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட 24-வது நபர். கேந்திரபால் 1996-ம் ஆண்டு ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அவர் தாம்பூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் பணிபுரிந்தார். பின்னர் 2011-ல் சொந்தமாக ஜவுளி தொழிலைத் தொடங்கினார். ஹகம்சிங்கை ஒரு ஓட்டலில் சந்தித்த இவர் அவருடன் சேர்ந்து வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டு 3.3 ஏக்கர் நிலம் மற்றும் தாம்பூரில் உள்ள ஒரு ஆடம்பரமான மாளிகையை உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான சந்தன் மன்ரால் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகரில் வசிப்பவர். மன்ரல் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டல்காட்-ராம்நகர் வழித்தடத்தில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்தார். பின்னர் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் சேகரித்து தனக்கு சொந்தமாக பஸ் வாங்கினார். மேலும் குமாவுன் பகுதியில் ஒரு போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கினார், பின்னர் 19 பஸ்களைச் வைத்து தொழில் செய்து வந்தார். கேந்திராபாலைச் சந்தித்து மோசடி கும்பலுடன் சேர்ந்த பிறகு, அவரது சொத்து பல மடங்கு அதிகரித்தது, மேலும் அவர் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் கல் உடைக்கும் ஆலையைத் தொடங்கினார்.

இவர் தனது போக்குவரத்து நிறுவனம் மூலம் சுமார் 30 மல்டி யூட்டிலிட்டி வாகனங்களை பல்வேறு அரசுத் துறைகளுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். 2019-ம் ஆண்டில் கேந்திராபால் ஜெகதீஷ் கோஸ்வாமி என்பவரை உத்தரகாண்டில் உள்ள ஒரு கோவிலில் சந்தித்தார். அல்மோராவில் வசிக்கும் கோஸ்வாமி, இந்த வழக்கில் கடந்த 21-ந் தேதி கைது செய்யப்பட்ட 22-வது நபர் ஆவார். அவர் கைது செய்யப்படும் போது பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

அவர் உத்தரகாண்டின் மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடகர்களில் ஒருவரான கோபால் பாபு கோஸ்வாமியின் மகன் ஆவார், இவர் கரீனா கபூர் நடித்த ‘ஜப் வி மெட்’ போன்ற பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றினார். கசிந்த வினாத்தாள்களைத் பணத்தை பொற்றுக்கொண்டு கை மாற்றுவதற்காக, தனது பகுதியில் இருந்து தேர்வு எழுதுபவர்களைக் தாம்பூரிலுள்ள வாடகை விடுதிக்கு அழைத்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவர் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் ஜோஷி ஆவார். இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இவரும் ஒருவர். பிராந்தியா ரக் ஷக் தளம் அமைப்பின் முன்னாள் ஊழியர் ஆவார்.

பணியில் முறைகேடு காரணமாக 2018-ல் அவர் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். கசிந்த வினாத்தாள்கள் மூலம் ஜோஷி, அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு அரசு வேலை கிடைக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான கும்பல் ரூ.200 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். கைதானவர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவற்றை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மோசடி மூலமாக சம்பாதித்த பணத்தில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 2013-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்த ‘வியாபம்’ ஊழலை மிஞ்சும் அளவுக்கு இந்த மோசடி நடந்துள்ளது. இது நாட்டில் நடந்த மிகப்பெரிய நுழைவுத் தேர்வு மோசடியில் ஒன்றாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.