;
Athirady Tamil News

பருவகால மாற்ற விளைவால் பெரிய நிறுவனங்கள் ரூ.11.96 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும்: அறிக்கை தகவல்..!!

0

சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றன. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன்முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து உள்ளனர். எனினும், இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழிவகுப்பதில் தீர்வு காணப்படாமல் உள்ளது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கரியமில வாயு பயன்பாட்டை குறைப்பதில் முழு அளவில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகள் பல கூட்டங்களை நடத்தி, பேசுவதுடன் தங்களுடைய பணி முடிந்து விட்டது என்ற போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றன. பருவகால மாற்ற விளைவுக்கு எடுத்துக்காட்டாக சமீபத்திய பாகிஸ்தான் வெள்ளம் நிபுணர்களால் சுட்டி காட்டப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள், சீனாவில் அதிகரித்த வெப்பநிலை, வெப்ப அலை பரவல், காட்டுத்தீ ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பருவகால மாற்றத்தின் கொடூர விளைவை வெளிப்படுத்தின.

இந்த சூழலில், ஐ.நா. ஆதரவு பெற்ற பிரசாரகர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின் முடிவுகள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பருவகால வார நிகழ்வில் இன்று சமர்ப்பிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கையில், பருகால மாற்றத்துடன் தொடர்புடைய அரசின் புதிய கொள்கைகள் மற்றும் நுகர்வோர் அணுகுமுறை ஆகியவற்றுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி கொள்ளாவிட்டால், பண்ணை மற்றும் உணவு துறையில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனங்களின் மதிப்பு வருகிற 2030-ம் ஆண்டுக்குள் சராசரியாக 7% என்ற அளவில் குறையும். இதனால், மொத்தம் ரூ.11 லட்சத்து 96 ஆயிரத்து 237 கோடி இழப்பை முதலீட்டாளர்கள் எதிர்காள்வார்கள் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அரசாங்கங்கள், கார்பன் வெளிப்பாட்டுக்கு விலை விதித்தால் அல்லது நுகர்வோர்கள் தங்களது இறைச்சி நுகர்வை குறைத்து விட்டால், வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லரை விலை உணவு துறை உள்ளிட்ட 40 பெரிய நிறுவனங்களும் தங்களுடைய கார்பன் வெளிப்பாடு அளவை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அறிக்கை தெரிவிக்கின்றது.

அதேவேளையில், தாவரம் சார்ந்த இறைச்சி மற்றும் வனம் புத்துயிரூட்டல் போன்ற தொழில்சார்ந்த பகுதிகள், இதே நிறுவனங்களுக்கு பெரிய, புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த ஆய்வின்படி, கால்நடை, பாமாயில் மற்றும் சோயா போன்ற பொருட்களுடன் தொடர்புடைய அத்தியாவசிய பொருட்களை முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்ற முந்தின அழைப்புகளுக்கு முக்கியத்துவம் காட்டப்பட்டு உள்ளது.

ஏனெனில், இந்த உற்பத்தி பொருட்கள் வனஅழிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதுதவிர, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் வனஅழிப்பு நிறுத்தம் மற்றும் அழிந்து போன வனங்களை பழைய நிலைக்கு கொண்டு வருதல் மற்றும் மதிப்பிழந்த நிலங்களை பொலிவு பெற செய்வது என்ற உறுதிமொழியை கடந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட சர்வதேச தலைவர்கள் எடுத்து கொண்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.