;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பலத்த பாதுகாப்புப் போடப்படுவதுடன், எந்தச் சூழலையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கருடசேவையின்போது நான்கு மாடவீதிகளில் சாமி வாகனத்தை நிறுத்துவதற்கு ஏற்ற இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு மின் விளக்கு வசதியோடு கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் வகையில் திருடர்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்கள் திருமலைக்கு வந்தால், அவர்களை பற்றிய அனைத்துத் தகவல்களும், புகைப்படங்களும் தெரியும்படி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்த காவல்துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாகக் கோவில் உள்ளேயே பிரம்மோற்சவ விழா நடந்தது. ஆனால், இந்த ஆண்டு கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. அதில், நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து பங்கேற்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கருடசேவை, தேரோட்டம், சக்கர ஸ்நானம் போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். கேலரிகளுக்கு உள்ளே வரும் பக்தர்கள், கேலரிகளில் இருந்து வெளியே செல்லும் பக்தர்களுக்கு பாதை வசதி ஏற்பாடு செய்யப்படும். திருமலையில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, குற்றச் செயல்களை தடுக்க ஏற்பாடு செய்யப்படும். இரவில் வெளிச்சம் தரும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

பிரம்மோற்சவத்தின்போது திருப்பதி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களை சோதனையிட நுழைவு வாயில்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கவும், பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, தேவைப்பட்டால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் வகையிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி ரெயில் நிலையம் முதல் திருமலை வரை முக்கிய சாலைகளில் வி.ஐ.பி.களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்படும்.

கருடசேவை மற்றும் பிற முக்கிய நாட்களில் திருமலையில் மோட்டார் வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, போலீசார் முன்கூட்டியே திட்டமிட்டு மோட்டார் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளுக்கு வாகனங்களை திருப்பி அனுப்பி, திருமலையில் வாகன நெரிசலை குறைப்பார்கள். பிரம்மோற்சவத்தையொட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி 27-ந்தேதி திருமலைக்கு வருகிறார். அன்றைய தினம் அனைத்து முக்கிய சாலைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், என முதல்-மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை மலைப்பாதை மற்றும் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்படும். திருட்டுச் சம்பவங்களை தடுக்க தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைத்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். திருமலை, திருப்பதியில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் பலகைகள் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் இ.சுப்ரஜா, விமலகுமாரி, குலசேகர், முனிராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.