;
Athirady Tamil News

பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம்!!

0

செப்டெம்பர் 28 ஆம் திகதியன்று நினைவுகூறப்படும் உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) பிரஜைகளுக்காக உழைக்கும் ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள், என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கலந்துரையாடலில், இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஜூலியஸ் க்ரீசியின் சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாந்தி மகிந்தாரத்ன மற்றும் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சட்ட ஆலோசகரும் ஆய்வாளருமான அஷ்வினி நடேசன் ஆகியோர் பேச்சாளர்களாகவும், சட்டத்தரணியும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான திரு. ஜாவிட் யூசுப் அவர்கள் நெறியாளராகவும் கலந்துகொண்டனர்.

தற்போதைய காலங்களில், பிரஜைகளின் உரிமைகளில் நாங்கள் மிகவும் கவனம்
செலுத்துகிறோம். ஜனநாயகத்தில் பிரஜைகளின் பங்கேற்பு, ஜனநாயகத்தில் சிறந்த பிரஜைகள் எவ்வாறு தினந்தோறும் ஈடுபட முடியும், ஏனெனில் கடந்த காலத்தில் மக்கள் தேர்தலில் வாக்களித்ததை, அடுத்த தேர்தல் வரையில் அதை மறந்துவிடுவது போலல்லாமல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அவர்கள் ஜனநாயகத்தில் பங்கேற்க வேண்டும். மேலும் இதற்கான கருவிகளில் ஒன்று தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் என ஜாவிட் யூசுப் கூறினார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தியதற்குப் பல உதாரணங்களை கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன அவர்கள் வழங்கியிருந்தார். “பிரஜைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருந்தாலும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின்
பயன்பாடு அரச நிறுவனங்களுக்கு எதிராக வலுவாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களுக்கு எதிராக அவ்வாறு வலுவாக பயன்படுத்தப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கும் ஒரு காரணி. இலங்கையின் பிரஜைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கடந்த ஐந்து வருடங்களில் தங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கு பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். ‘இலங்கையின் தகவல் அறியும் உரிமைப் பயணத்தில் வெற்றிகளும் சவால்களும்’ என்ற தலைப்பில் பேசும் போது அவர் இவ்வாறு தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உரையாடலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரசாந்தி மகிந்தாரத்ன குறிப்பிடுகையில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசாங்கமும் பிரஜைகளும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) சாதனையை நோக்கி பயணிக்க உதவும் ஒரு பாலமாகும். ஆனால் பொது அதிகாரிகளோ அல்லது பிரஜைகளோ வெளிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி தொடர்
நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது கடக்கப்படாத பாலமாகவே இருக்கும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொது அதிகாரிகளின் நடத்தையில் சிறந்த வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியிருந்தாலும், ஊழல் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் இருப்பதாகத் தெரியவில்லை” என்று அவர் நடாத்திய ஆராய்ச்சித் திட்டத்தின் பிரதான முடிவுகளைப் பற்றி விவாதித்தார். ஐ.நா. நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் பயன்பாட்டை ஆய்வு செய்ய சுவிஸ் அரசாங்கம் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு அனுசரணை வழங்குகின்றது. அஷ்வினி நடேசன் அவர்கள், தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் ஏற்பட்ட முன்னேற்றத்தை வலியுறுத்தினார்: “வெளிப்படைத்தன்மையைப் பற்றி நாம் பேசும்போது, தன்னிச்சையான வெளிப்பாடுகள் அதிகரித்த வெளிப்படைத்தன்மையின் பெரும் பகுதியைக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது முக்கியம்.

இருப்பினும், நாங்கள் எதிர்மறையான வெளிப்பாடுகளை மட்டுமே பார்க்கிறோம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது மற்றும் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றது, ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம்
செல்ல வேண்டியுள்ளது”, RTI மற்றும் ஊழலை குறைத்தல் அல்லது வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் போது அவர் மேலும் தெரிவித்தார். இவ் இணையவழி கலந்துரையாடலானது, Media Reform Lanka இனால் வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களினதும் அதாவது, இலங்கை தகவல் உரிமைக்கான ஆணைக்குழுவின், கட்டளைகளுக்கான பயிற்சியாளர் வழிகாட்டி (2017-2021) இலங்கையின் தகவல் அறியும் உரிமையின் ஆட்சி மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகள்: பிரதிபலிப்புக்கான சிந்தனைகள் மற்றும் “இலங்கையின் தகவல் அறியும் உரிமைக்கான
ஆணைக்குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டளைகளுக்கான சட்ட விளக்கங்கள்; 2019 – 2021”, போன்றவற்றின் வெளியீட்டையும் குறித்தது. இந் நூல்கள் கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன, நிவேதா ஜெயசீலன் மற்றும் இன்ஷிரா ஃபாலிக் ஆகியோரால் திருத்தப்பட்டது. மூன்று மொழிகளிலும் நடத்தப்பட்ட இவ் இணையவழி கலந்துரையாடலில், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்தவர்களும் இணைந்து கொண்டனர். பொது மக்களுக்காக முகப்புத்தகத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. குழு விவாதத்தைத் தொடர்ந்து கேள்வி, பதில்
அமர்வு நடைபெற்றது, இதில் RTI பயன்பாடு தொடர்பான பரந்த அளவிலான கேள்விகள் பேச்சாளர்களிடம் முன்வைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.