;
Athirady Tamil News

அமெரிக்காவிற்குள் அபாயகர கிருமியை கடத்திய சீனா?

0

கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசி உள்ளிட்ட பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்கு கடத்தி சென்றதாக 2 சீன ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழத்தில் சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியான்(33) ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரை சந்திக்க சீன பல்கலைக்கழகத்தில் நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இவரது காதலன் ஜுன்யாங் லியு(34), கடந்த ஜூலை டெட்ராய்ட் பெருநகர விமான நிலையம் வழியாக அமெரிக்கா வந்துள்ளார். அப்போது எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறையினருடன் இணைந்து விமான நிலையம் வந்த லியுவிடம் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது ஆபத்தான நோய்க்கிருமியை லியு அமெரிக்காவிற்கு கடத்தி வந்ததாகவும் இது வேளாண் பயங்கரவாத ஆயுதம் எனப்படும் ஒரு வகை பூஞ்சை எனவும் கூறப்படுகிறது.

அதாவது, “ஃபுசேரியம் கிராமினேரம்” எனப்படும் ஆபத்தான இந்த பூஞ்சை, பயிர்களில் கருகல் நோயை ஏற்படுத்தக் கூடியவை. இது மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை.

கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகிய உணவுப்பயிர்களில் நோயை ஏற்படுத்தக்கூடியவை. இது உணவில் கலந்தால் பயிர்களை அழிப்பதுடன் மனிதர்கள், கால்நடைகளுக்கு வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியவை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பில்லியன் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஆபத்தான நோய்க்கிருமையைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட லியுவை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அவரது காதலியின் ஆராய்ச்சிக்காக கொண்டு வந்ததாக தெரிவித்ததை அடுத்து யுன்கிங் ஜியானும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த பூஞ்சை மூலம் மனிதர்கள், கால்நடைகளுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்த சதி, சீன கம்யூனிஸ்ட் கட்சி மூலம் நிதியுதவி பெற்று உயிரியியல் கிருமி கடத்தப்பட்டதாகவும், இதுபோன்ற செயல்களுக்கு சீன அரசிடமிருந்து நிதி பெற்றுள்ளதாகவும் எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.