தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பம்

தேசிய சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (5) காலை 9.15 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடப்பட்ட நிகழ்வோடு பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செயற்றிட்டமானது யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவும் கலந்துகொண்டார்.
முதலில் அரசாங்க அதிபர் மரக்கன்றினை நட்டு வைத்தார். அதன் பின்னர் சம நேரத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இந்த மரங்களை நாட்டிவைத்தனர்.
இந்த மரக்கன்று நடுகைக்காக 450 மரக்கன்றுகளை கிறீன் லேயர் நிறுவனத்தினர் இலவசமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.