;
Athirady Tamil News

திருப்பதி பிரம்மோற்சவ விழா: 3 லட்சம் பக்தர்கள் கருடசேவையை தரிசிக்கலாம்..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருடசேவை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி இரவு 7 மணியளவில் தொடங்கி நடக்கிறது. அன்று வாகனச் சேவையைப் பார்க்க வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் வாகன தரிசனம் வழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்தநிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, போலீஸ் டி.ஐ.ஜி ரவிபிரகாஷ், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி ஆகியோர் கோவிலின் நான்கு மாட வீதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். நான்கு மாடவீதிகளில் சாமி உலா வரும்போது, பக்தர்கள் உற்சவருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கும் இடம், கேலரிகளை பார்வையிட்டனர்.

அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் கருடசேவை அன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பக்தர்கள் கருடசேவையை தரிசிக்கலாம். கேலரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாசல்கள் வழியாக பக்தர்கள் சென்று கருடவாகனத்தில் எழுந்தருளும் மலையப்பசாமியை வழிபடலாம். வீதிஉலாவின்போது கற்பூரம், நெய் தீப ஆரத்தி கொடுக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு ஆரத்தி வாசல்களிலும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கருடசேவையைக் காண வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் கேலரிகளிலும், கோவில் எதிரே உள்ள நாதநீராஞ்சன மண்டபம் முதல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரையிலும் அனுமதித்தால் கூடுதலாக 25 ஆயிரம் பக்தர்கள் கருடசேவையைத் தரிசனம் செய்யலாம்.

அதன் மூலம் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் முதல் 3 லட்சம் பக்தர்கள் வரை மலையப்பசாமியின் கருட வாகன வீதி உலாவை தரிசிக்க முடியும். தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடம், ராம்பகீதா விடுதி அருகில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் கருடசேவை தரிசனம் அளித்து, மலையப்பசாமி வாகன மண்டபத்தை அடைவார். அறங்காவலர் குழு தீர்மானித்த முடிவின்படி வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 தரிசனம் உள்பட பல்வேறு வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருடசேவை அன்று சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும்.

கருடசேவைக்காக வியாழக்கிழமை (அதாவது நேற்று) காலையில் இருந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பக்தர்களின் கூட்டத்துக்கேற்ப திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர், பக்தி சேனல் அதிகாரி சண்முககுமார், என்ஜினீயர் ஜெகதீஸ்வர்ரெட்டி மற்றும் காவல்துறையினரும், தேவஸ்தான அதிகாரிகளும் உடனிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.