ரூர்கேலாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம்!
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.
தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ-1 விமானம் ஒன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், ரூர்கேலாவுக்கு முன்னதாக 10 கி.மீ. தொலைவில் ஜல்டா அருகே சென்று கொண்டிருந்தபோது விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகள், 2 பணியாளர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் பிரசன்ன பிரதான் கூறுகையில்,
விமானம் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமானம் ரூர்கேலாவுக்கு 10 கி.மீ. முன்னதாக விழுந்து நொருங்கியது. விமானத்திலிருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். லேசான காயங்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாநில அரசு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும், தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் பி. பி. ஜெனா கூறினார்.