பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; வாலிபர் பலி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் காளியம்மன் கோவில் அருகே கோபாலன்பட்டியை சேர்ந்த திருப்பதி (வயது 29) என்பவர் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படும் குழாய்கள் தயாரித்து வந்தார். அந்த இடத்தில் உரிய அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக பேன்சி ரக பட்டாசுகளையும் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.
ஒருவர் பலி
அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் திருப்பதி மற்றும் 17 வயது சிறுவன் என இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி பரிதாபமாக இறந்தார். வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.