;
Athirady Tamil News

தமிழக சட்டசபை இந்த மாதம் 3-வது வாரம் கூடுகிறது: ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது..!!

0

தமிழக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடர் மே 10-ந்தேதி நிறைவடைந்தது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் 6 மாதங்களுக்குள், அதாவது நவம்பர் 10-ந்தேதிக்குள் கூட்டப்பட வேண்டும். இந்த நிலையில் இந்த மாதம் 3-வது வாரத்தில் சட்டசபையை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அநேகமாக17-ந்தேதி முதல் சட்டசபை கூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் சபாநாயகர் மு.அப்பாவு வெளியிடுவார். இந்த மழைகால கூட்டத்தொடரை 3 அல்லது 4 நாட்கள் நடத்த வாய்ப்புள்ளது. இதுபற்றி அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்படும்.

அரசியல் பரபரப்பு
தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை பெரும் பரபரப்பாக உள்ளது. அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, அந்த கட்சியின் தலைமை பதவி தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்று இரு பிரிவாக அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில், 2 தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இது சட்டசபையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

எதிக்கட்சி துணைத்தலைவர் பதவியிலும் தற்போது சிக்கல் நீடிக்கிறது. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சபாநாயகர் மு.அப்பாவு முடிவு செய்த பிறகுதான் சட்டசபையில் அவர்களுக்கான பதவி மற்றும் இருக்கை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே இதுதொடர்பாகவும் 2 தரப்பிலும் கருத்துகள் வைக்கப்படலாம்.

குற்றச்சாட்டுகள்
மேலும், அரசியல் களத்தில் தி.மு.க. அரசு மீது அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கஞ்சா புழக்கம் மற்றும் இதுவரை நீக்கப்படாத நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிக்கட்சிகள் கொண்டுவர வாய்ப்புள்ளது. எனவே விரைவில்கூடவுள்ள சட்டசபை கூட்டத்தொடர் பெரும் அரசியல் பரபரப்பாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கைகள் சமர்ப்பிப்பு
வேறு சில முக்கிய அறிக்கைகளும் இந்த கூட்டத்தொடரில் சட்டசபையில் வைக்கப்பட உள்ளன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பலர் இறந்த சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாரின் விசாரணை அறிக்கை ஆகியவை இந்த கூட்டத்தொடரின்போது வைக்கப்படும்.

இருக்கையில் மாற்றம்
கொரோனா பரவல் காலகட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அங்கு விசாலமாக இடவசதி இருந்தது. எனவே இருக்கைகளுக்கு இடையே எம்.எல்.ஏ.க்கள் சென்று வருவதில் நெருக்கடி நிலவவில்லை. தற்போது வழக்கம்போல, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அரங்கத்தில் சட்டசபை அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சட்டசபையில் நடைபெறும் சில நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்காக சில வசதிகளை செய்ய வேண்டியதிருந்ததால், எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகள் நெருக்கி போடப்பட்டன. இதனால் அவர்கள் சட்டசபையில் நடமாடுவதில் நெருக்கடி நிலவும் என்பதால் இதுபற்றி சட்டசபை செயலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் மு.அப்பாவு உத்தரவிட்டார். இதுபற்றி பொதுப்பணித்துறையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதில், எம்.எல்.ஏ.க்கள் உட்காரும் இருக்கைகளில் ‘குஷன்’ குறைந்த அளவுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் உட்காரும்போது இருக்கையின் முன்பகுதியில் கூடுதல் இடைவெளி கிடைக்கும் என்பதால் எம்.எல்.ஏ.க்கள் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படாது. அதுபோல் அமைச்சர்கள் தவிர எம்.எல்.ஏ.க்களுக்கு முன்புள்ள ‘மைக்’கள், அசைக்க முடியாதபடி உறுதியாக பொருத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.