;
Athirady Tamil News

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் வந்தார்?

0

இலங்கைக்கான நார்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை தற்போது அநேகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர், எரிக் சொல்ஹெய்ம் அடிக்கடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தாலும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான காலகட்டத்தில் இலங்கைக்கான விஜயத்தை அவர் கைவிட்டிருந்தார்.

இந்த நிலையில், எரிக் சொல்ஹெய்ம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்கள் காணப்படுவதாக மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பிறகான காலத்தில், தமிழ் மக்களுக்கு சரியான பதிலை நார்வே கூறவில்லை என்ற அடிப்படையிலேயே, தமிழ் மக்கள் மத்தியில் எரிக் சொல்ஹெய்ம் மீது விமர்சனங்கள் காணப்படுகின்றன.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதி மற்றும் சமாதான உடன்படிக்கை காணப்பட்ட காலப் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டிருந்தார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில், தமிழ் மக்களுக்கு என்ன நேர்ந்தது, இலங்கை அரசாங்கம் யுத்த குற்றத்தில் ஈடுபட்டதா, இன அழிப்பு நடந்தா இல்லையா, விடுதலைப் புலிகள் தவறிழைத்தார்களா, உள்ளிட்ட யுத்தத்தின் முடிவு தொடர்பிலான கருத்தை நார்வே எந்தவோர் இடத்திலும் பதிவு செய்யவில்லை என அவர் கூறுகின்றார்.

காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர், சர்வதேச பிரதிநிதி ஒருவரை தனது ஆலோசகராக நியமிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென அறிய முடிகின்றது.

எரிக் சொல்ஹெய்முக்கு மேலதிகமாக மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷிட்டும் சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முக்கிய பங்குதாதராக இருந்த எரிக் சொல்ஹெய்ம், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தராது, நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் வருகை தந்தமை பாரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சனிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசராக நியமிக்கப்பட்டமையின் பின்னணியில் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?

நோக்கமொன்று இல்லாமல் இந்தப் பதவியை வழங்கியிருக்க மாட்டார். புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று இல்லாமல் இந்தப் பதவியை வழங்கியிருக்க மாட்டார். ஏதோவொரு பின்னணி இருக்க வேண்டும். ஆனால் அந்த பின்னணி என்னவென்பதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், நிச்சயம் பின்னணியொன்று உள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை தொடர்ச்சியாக பதவியில் வைத்திருப்பதற்கான அல்லது இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான ஏதோவொரு நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட அழைப்பில் அவர் வந்தாலும், அவருடைய விருப்பத்திற்கு மாத்திரம் இந்த பதவி கொடுக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது. பின்னணி இருக்கின்றது. ஆனால் என்ன பின்னணி என்பதை உடனடியாக சொல்ல முடியாது.

எரிக் சொல்ஹெய்ம் இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முக்கிய பங்கை வகித்தார். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவர் வருகை தந்ததாக பதிவுகள் இல்லை. தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் அவர் வருகை தந்துள்ளார். மீண்டும் பிரச்னை ஏற்பட்ட தருணத்திலேயே வந்துள்ளார். அதற்கான காரணம் என்ன?

இலங்கை வலுவிழந்துள்ளது. பிரதான எதிர்கட்சிகள் பலமிழந்துள்ளன. பொருளாதார நெருக்கடி இருக்கின்றது. இலங்கைக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. வருமானம் குறைவடைந்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் வருகின்றார் என்று சொன்னால், நிச்சயமாக இதில் புவிசார் அரசியல் பின்னணி இருக்கின்றது. அது எந்த வியூகத்தில் இருக்கின்றது என்பதைத் தற்போது சொல்ல முடியாது.

ஆனால், நிச்சயமாக புவிசார் அரசியல் நோக்கம் இருக்கின்றது. நிச்சயமாக சீனாவின் அரசியல் கிடையாது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் பின்னணியாகவே இது இருக்கின்றது. ரஷ்ய – யுக்ரேன் யுத்தம் உக்கிரமடைந்து வருகின்ற சூழலில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது ஐக்கிய நாடுகள் சபையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், ரஷ்யாவிற்கு ஆதரவாகவோ, எதிராகவோ சீனா, இந்தியா வாக்களிக்காத சந்தர்ப்பத்தில் இவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை, புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று இதில் இருப்பதைக் காட்டுகின்றது.

இலங்கையில் இதுவரை காலம் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள், சர்வதேச பிரதிநிதியொருவரை, தமது ஆலோசகராக இதற்கு முன்னர் நியமித்துள்ளார்களா?

இல்லை. இது தான் முதலாவது சந்தர்ப்பம். உலகத்தில் காலநிலை சம்பந்தமான ஆராய்ச்சிகள், அது தொடர்பிலான மாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது உண்மை. உலகம் காலநிலை மாற்றங்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றது. அதற்காக எரிக் சொல்ஹெய்மை தமது ஆலோசகராக ஜனாதிபதி நியமிப்பதில் பிரச்னைகள் இருக்கின்றன. ஏனென்றால், காலநிலை தொடர்பிலான நிபுணர்கள் பல பேர் உலகத்தில் இருக்கின்றார்கள்.

இலங்கையில் கூட பல பேர் இருக்கின்றார்கள். காலநிலை அறிவோடு, காலநிலையை ஆழமாக அவதானித்து அறிக்கை சமர்ப்பிக்கக்கூடிய, விளக்கம் சொல்லக்கூடிய பலர் இருக்கின்றார்கள். பொருளாதார நெருக்கடிக்குள் காலநிலை தொடர்பிலான ஆலோசகராக நோர்வேயில் உள்ள ஒருவரை நியமிப்பது கேள்வியை எழுப்புகின்றது. அவருக்கு நிச்சயமாக சம்பளம் ஒன்று வழங்க வேண்டும். இலவசமாக வேலை செய்ய வரமாட்டார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவரை இந்த இடத்திற்கு நியமிப்பது சந்தேகத்திற்குரிய விடயம்தான்.

அவருடைய வருகை தொடர்பில் சிங்கள செய்தியாளர்களே சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ் மக்கள் சார்பாகவா இவர் இலங்கைக்கு வருகை தந்தார் என கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிங்கள ஊடகவியலாளர்கள், அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்கள். புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றவா அவர் இங்கு வந்தார் என்றும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அப்படி இல்லை. ராஜதந்திரிகள் வந்து போவது வழமையானது விடயம். எவர் வந்தாலும் இலங்கையின் இறைமையை மீறிச் செயற்பட முடியாது.

ஆகவே அவர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று வந்திருக்கின்றார் என்று பந்துல குணவர்தன பதில் வழங்கினார். சிங்கள செய்தியாளர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் மக்களுக்கும் சந்தேகம் காணப்படுகின்றது. புவிசார் அரசியல் நோக்கத்திற்காக வந்திருக்கின்றார் என்று தமிழ் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு தரப்பிற்கும் இது தொடர்பில் சந்தேகம் இருக்கின்றது. சர்வதேச காலநிலை தொடர்பிலான ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவரை நியமித்தது, எந்த அடிப்படையில் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் தற்போது பாரிய பின்னடைவுகள் காணப்படுகின்றன. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் எரிக் சொல்ஹெய்ம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டார். இப்படியான சூழ்நிலையில், எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக வந்திருப்பாரா அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்காக வந்திருப்பாரா?

ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக வந்திருப்பார் என்பது ஒன்று. அதோடு, உள்ளக அரசியலை மேம்படுத்துவதற்கான நோக்கமும் இருக்கலாம். ரணில் விக்ரமசிங்கவின் கட்சி சார்ந்த அரசியலை மேம்படுத்துவதற்கு அவர் வந்திருக்கமாட்டார். இலங்கை முக்கியமான தளம் என்ற அடிப்படையில், புவிசார் அரசியலின் பிரகாரம், இலங்கை எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர் வந்திருக்கலாம்.

ரணில் விக்ரமசிங்க அல்ல, எந்தவொருவர் ஜனாதிபதியாக இருந்தாலும், அவரை தங்கள் வசம் எடுப்பதற்கான நிகழ்ச்சி நிரல் போகுமே தவிர, தனிப்பட்ட ரீதியில் ரணில் விக்ரமசிங்கவை உயர்த்துகின்ற அல்லது அவரது கட்சியை உயர்த்துகின்ற நோக்கம் இதில் இருந்திருக்காது. இலங்கையை கூடுதலாக சீனாவின் பக்கம் கொண்டு செல்லாது பாதுகாக்கும் நோக்கமாக இருக்கலாம். சீனாவின் கடன் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

சீனா கூடுதலான கடனை கொடுக்கக்கூடும். சீனாவின் கடன்களை செலுத்த முடியாது இலங்கை திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் சில இடங்களை சீனாவிற்கு தாரைவார்க்க வேண்டிய நிலைமை வருகின்றது. அந்த விடயங்களை கட்டுப்படுத்தும் நோக்கம் தான், இவருடைய பதவியை பார்க்கலாமே தவிர, ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட நோக்கத்தை நிவர்த்தி செய்துகொள்வதற்காக வெளிநாட்டு பிரதிநிதி இலங்கைக்கு வந்திருப்பார் என்று சொல்ல முடியாது.

இலங்கையின் நலன் சார்ந்த விடயம் என்பதை விட, இலங்கை தங்களுக்கு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற புவிசார் அரசியல் பின்னணியோடு அவர் வந்திருக்கலாம். நார்வே என்பது அமெரிக்கா சொல்வதை செய்கின்ற ஒரு நாடு. அமெரிக்காவிற்கு வேண்டப்பட்ட ஒரு நாடு. அமெரிக்காவின் தேவைகளை நிறைவேற்றுகின்ற ஒரு நாடு. ஆகவே அந்த நாட்டின் ஒரு பிரதிநிதி இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கின்றார் என்றால், முக்கியமாக அமெரிக்க நலன்சார்ந்த போக்காகத்தான் அவருடைய போக்கு இருக்கும். அதில் மாற்று கருத்து இல்லை.

இலங்கையில் சமாதான உடன்படிக்கை காணப்பட்ட காலப் பகுதியில் ஆட்சியில் பிரதமராக இருந்தது ரணில் விக்ரமசிங்க. அந்த காலப் பகுதியில் நார்வே பாரிய பங்களிப்பைச் செய்தது. அந்த அடிப்படையில் தான் இந்த கேள்வியை எழுப்பினேன்?

ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே அவருக்கு பரிட்சயமானவர். சமாதான பேச்சுவார்த்தை காலப் பகுதியில் அவர் அமெரிக்க, இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் தான் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்தார். விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும், அவர்களுடைய அணுகுமுறை இல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளை தரம் குறைக்கின்ற அணுகுமுறைகள் காணப்பட்டன.

ரணில் விக்ரமசிங்கவின் அணுகுமுறை அவ்வாறு இருந்தது. ரணில் விக்ரமசிங்கவின் அணுகுமுறை அவ்வாறு சென்றால், அது அமெரிக்க, இந்திய நிகழ்ச்சி நிரல் தான். இலங்கையை சீனாவின் பக்கம் கொண்டு செல்லக்கூடிய ஒரு சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ சீனாவிடம் இலங்கையை அடகு வைக்கக்கூடிய நிலைமைக்கு ரணில் விக்ரமசிங்க தள்ளப்பட்டுள்ளார்.

கடன் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு வகையிலான ஆலோசனைகளைக் கொடுத்து, சீனாவின் பக்கம் செல்லாமல், தங்கள் பக்கம் நிற்கக்கூடிய, கடன்களை சமாளிக்கக்கூடிய வகையிலான ஆலோசனைகளை வழங்குவது எரிக் சொல்ஹெய்ம் காரணமாக இருக்கலாம்.

எரிக் சொல்ஹெய்ம் மாத்திரமன்றி, சர்வதேச காலநிலை தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகராக மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன?

அதுவொரு சார்பு போக்கு. தனியொருவரை மாத்திரம் நாங்கள் நியமிக்கவில்லை. இன்னொருவரையும் நியமித்திருக்கின்றோம். அதுவொரு குறியீடு. நாங்கள் எரிக் சொல்ஹெய்மை மட்டும் நியமிக்கவில்லை. இன்னொரு நாட்டின் ஜனாதிபதியையும் நியமித்துள்ளோம். எரிக் சொல்ஹெய்ம், ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்காக வருகை தந்திருக்கின்றார் என்ற விடயத்தை மக்களுக்கு சொல்வதற்காகவே மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதன் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி கூட, மேற்குலகத்திற்கு சார்பானவர் தான். ஆகவே அவருக்கும் அந்த நிகழ்ச்சி நிரலை வடிவாகக் கொண்டு செல்ல முடியும். எரிக் சொல்ஹெய்ம்மை நியமித்தமைக்கான எதிர்வாதங்களைக் குறைக்கும் நோக்கிலேயே மொஹமட் நஷிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.