;
Athirady Tamil News

குழந்தைகளின் மனநலத்திலும் கவனம் செலுத்துங்கள் !! (மருத்துவம்)

0

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு போஷாக்கான உணவை கொடுப்பது மாத்திரம் தீர்வாகாது. மாறாக அவர்களின் மனநலனிலும் பெற்றோர்கள் அதிகம் அக்கரை செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. உடலும் மனமும் சீராக இருக்கும் குழந்தைகள் தான் முழுமையான ஆரோக்கியமான குழந்தைகளாக பரிணமிப்பார்கள். அந்த வகையில் குழந்தைகளின் மிகச்சிறந்த மனவலிமையை பின்வரும் படி நிலைகளில் பரிசோதித்துப் பார்ப்பது உங்களுக்கு இலகுவானதாக இருக்கும்.

01. வளர்ச்சி
02. விருத்தி
03. தேர்ச்சி
04. மகிழ்ச்சி

உங்கள் குழந்தைகளும் இந்நான்கு நிலைகளிலும் ஆரோக்கியமாக இருந்தாள் தான் அவர்கள் முழுமையான ஆரோக்கியமான குழந்தைகளாக கருதப்படுவார்கள்.

அந்த வகையில் குழந்தைகளின் வளர்ச்சி என்பது அவர்களின் உடல் நிறை, சாதாரணமாக நிறைக்கேற்ற உயரம், மண்டையோட்டின் வளர்ச்சி என்பனவற்றை குறிக்கும். எனவே அவர்களுடைய உடல் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து செல்கின்றதா என்பதை சரியாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். போஷாக்கான உணவும், அதற்கேற்றவாறு அவர்களில் வெளிபடும் தூண்டுதல்களும் சரியான முறையில் அமைகின்ற போதுதான் குழந்தைகளின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக அமையும்.

இவ்வாறு வெறுமனே உடல் வளர்ச்சி மாத்திரம் சீராக இருந்தால் போதாது. குழந்தைகள் குறிப்பிட்ட காலத்தில் வெளிப்படுத்தும் அல்லது செய்யும் செயற்பாடுகளும் சீராக இருக்கின்றதா என்பதுவும் முக்கியமான ஒன்றாகும். அதனையே நாம் விருத்தி நிலை என்கின்றோம்.

உதாரணமாக குறித்த ஒரு காலத்திற்குப் பின் தவழ்தல், கிட்டத்தட்ட ஒரு வயதை அடையும் போது மெதுவாக தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தல், சில வார்த்தைகளை உச்சரித்தல் போன்ற குழந்தைகளின் அடிப்படை அம்சங்களில் படிபடியாக முன்னேற்றம் அடைந்து வருகின்ற நிலை தான் விருத்தி நிலை எனப்படுகின்றது. எனவே உடல் அளவில் வளர்ச்சியடைந்து வருவதுடன் அவர்களின் விருத்தி நிலைகளிலும் அந்ததந்த காலப்பகுதிக்குறிய அறிகுறிகளை சரியாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்க வேண்டும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விருத்தி நிலையை தொடந்து தேர்ச்சி நிலை மிக முக்கியமானதாகும். அதாவது உடலளவில் வளர்ந்து தனது நாளாந்த செயற்பாடுகளில் விருத்தியடைந்த குழந்தைகள் தன்னுடைய நடத்தைகளை தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் நிலையை தான் தேர்ச்சி நிலை என்கின்றோம்.

இந்நிலையில் குழந்தைகள் தனது நடத்தைகளை தானே கட்டுப்படுத்திக் கொள்வது அவர்களது மனநலனில் முக்கியமான கூறாக கருதப்படுகின்றது. வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு உணர்ச்சியின் செயற்பாட்டில் இயங்கி கொண்டிருக்காமல் தனது நடத்தைகளை தானே கட்டுப்படுத்திக் கொள்வது குழந்தைகளின் மனநலனில் அடிப்படையான அம்சமாகின்றது.

அத்துடன் நெருக்கடியான அல்லது புதிய அனுபவங்களை பெறும் போது குழந்தை அதற்கு இசைவாக்கம் அடைவதுடன் அவ்வாறான சூழலை மெதுவாக அணுகி அதன் முகம் தான் எதிர்கொள்ளும் சின்ன சின்ன பிரச்சினைக்குள் இருந்து மீள்வது அக்குழந்தை மிகச்சிறந்த தேர்ச்சி நிலையில் இருப்பதற்கு சான்றாக அமையும்.

இவ்வனைத்து நிலைகளுக்கும் அப்பால் அக்குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதுவும் அதன் மனநலனில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. வெறுமனே சிரித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமன்றி பிறருடன் உறவாடி தனது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றதா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே நாம் மேற்குறிப்பிட்டது போல உங்கள் குழந்தையும் வளர்ச்சி, விருத்தி, தேர்ச்சி மற்றும் மகிழ்ச்சி ஆகிய நிலைகளில் எப்படி தன்னை கட்டமைத்துக் கொள்கின்றது என்பதை நன்கு அவதானித்து பார்ப்பது உங்களது கடமையாகும். இதன் மூலம் அக்குழந்தையின் மனநலம் எவ்வாறு இருக்கின்றது என்பதை நீங்கள் தெளிவாக விளங்கி கொள்ள முடியும்.

அந்நிலைகளில் ஏதேனும் குறைபாடு அல்லது வித்தியாசம் தெரிந்தால் உடனடியாக ஒரு மனநல வைத்தியரை நாடுங்கள். ஆரம்பத்தில் அவ்வாறான பிரச்சினைகளை பார்த்து அதற்கான சிகிச்சைகளை செய்து கொள்வது அவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.