;
Athirady Tamil News

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக் கொலை!

0

கனடா நாட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி இளைஞர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் அபோட்ஸ்ஃபோர்ட் நகரத்தில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்பிரீத் தாலிவால் (வயது 28) எனும் இளைஞர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜன.9 ஆம் தேதி மதியம் நவ்பிரீத் தாலிவாலை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த நவ்பிரீத்தை மீட்டு காவல் துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நவ்பிரீத் தாலிவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குற்றவாளிக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் தொடர்ச்சியாக இந்தக் கொலை அரங்கேறியுள்ளதாக, கனடா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மீது நடத்தப்படும் பணப்பறிப்பு சார்ந்த கொலையாக இது இருக்கக் கூடும் எனும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும், இந்தக் கொலை வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் கனடாவின் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, பிரபல குற்றவாளிக் குழுவின் தலைவரான டோனி பால் என்பவர் நவ்பிரீத் தாலிவாலின் கொலைக்குப் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கொலை செய்யப்பட்ட பஞ்சாபி இளைஞர் நவ்பிரீத் தாலிவாலின் குடும்பத்தினர் கடந்த 1995 ஆம் ஆண்டு கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இத்துடன், நவ்பிரீத் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.