;
Athirady Tamil News

இஸ்ரேல் தாக்குதலில் அக்.10 முதல் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொலை! – ஐ.நா. தகவல்

0

காஸாவில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் கடந்த 2025 அக்டோபர் 10 ஆம் தேதி போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, வீடுகளை விட்டு வெளியேறிய பாலஸ்தீன மக்கள் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பி வந்தனர்.

ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும் இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய இடங்களின் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகு காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதகளில் சுமார் 100 குழந்தைகள் கொல்லப்பட்டதாக, ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் (யுனிசெஃப்) செய்தித்தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் இன்று (ஜன. 13) தெரிவித்துள்ளார்.

காஸா மீதான இஸ்ரேல் வான்வழி, ட்ரோன்கள், டேங்க் ஷெல்கள், துப்பாக்கிச் சூடு ஆகிய தாக்குதல்கள் மூலம் குழந்தைகள் கொல்லப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, காஸாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்திய போரில் 71,391 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், போர்நிறுத்தம் அமலில் உள்ள சூழலில் மட்டும் இதுவரை 440-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.