;
Athirady Tamil News

திருவள்ளூர்: ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் மாசிதெப்ப திருவிழா!!

0

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் ஒன்று உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருகோவிலில் நேற்று இரவு 17-ம் ஆண்டு மாசிதெப்ப திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை சுந்தர விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை சுக்கிரவல்லி அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. நேற்று மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

எனவே, கிராம மக்கள் மடவிளாகம் கிராமத்திலிருந்து தாய் வீட்டு சீதனமாக மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பழம், புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேள-தாளம் முழங்க கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், கைலாச வாத்தியம் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர், அருள்மிகு சோமஸ்கந்தர் அம்பாள் கோவிலில் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள திருக்குளத்தில் சுவாமி உலாவரும் நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் ஏற்பாட்டில் 8-வது ஆண்டாக 3,000 பேருக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், பொதுமக்கள், பக்தர்கள் என சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.